முளைவிட்ட பயிரை மண் பார்த்தது. கிட்டத்தட்ட ஒரு தாயின் பெருமிதம். "இது என்னால்தான்" என்று ஆனந்தப்பட்டுக் கொண்டது.
அந்தக் குட்டிப் பயிரை நீர் கண்டது. "நான்...நான்...இல்லை, இல்லை... இது வளர்ந்தது என்னால்தான்..." மகிழ்ச்சியில் அதன் இமையோரம் ஈரம் கசிந்தது.
அந்தப் பயிரை வாரி எடுத்து உச்சி முகர விரும்புவது போல் கதிரவன் தன் கிரணங்களால் அவற்றைத் தழுவினான். "என் வெப்பத்தின் சம்பவமே நீ எனச் சொல்லிப் புன்னகைத்தான்"
"நல்ல பருவத்தில் நல்ல விதைகளை நான் விதைத்ததால்தான் பயிர் வளர்ந்துள்ளது" விதைத்த மனிதன் களிப்பெய்தினான்.
"என் பிறப்பில் வளர்ச்சியில் இவ்வளவு போட்டா போட்டியா? சச்சரவா? இதில் நான் பெருமைப்பட ஒன்றிமில்லையா?" இளம் பயிர் மனம் வாடியது.
துவண்ட பயிரைக் கண்டு மண் துடித்தது. "என் மடியிலா இப்படி ஒரு வாட்டம்? மாட்டேன். உன்னை வாட விட மாட்டேன்" தன் மடியை விரித்துப் பயிரை மேலும் ஆறுதலாக அணைத்துக் கொண்டது.
"நான் அமுதூட்டிய பயிர் வாடுவதா?" நீர் வருந்தியது. பயிரை இறுகத் தழுவியது. "ஊருக்கே உலகுக்கே உயிர் ஊட்டுபவன் நான் ஸ்பரிசித்த உனக்கு ஊறு ஏற்படுவதா? பயிரே வாடாதே உனக்கு வேண்டியதை நான் தருகிறேன்." சூரியன் சொன்னான்.
பயிர் எல்லோரையும் கேட்டது. அதற்குப் பேரானந்தம். "என் வளர்ச்சியில் இவ்வளவு பேருக்கு அக்கறையா?"
அதன் உள்ளம் உவகையில் துள்ளியது. உள்ளத்து மகிழ்ச்சி உடலிலும் பரவி அதைப் பரவசப்படுத்தியது.
மனிதன் பயிரைப் பார்த்தான்."ஆஹா, இந்தப் பயிர் எப்படி தளதளவென்று வளர்ந்து விட்டது?" அவனுக்குள் பெரும் களிப்பு.
மறுநாள் அந்தப் பயிரைப் பிடுங்கித் தின்றான் மனிதன்.