துறவிகளின் மடாலயத்திற்கு புகழ் பெற்ற சிற்பி ஒருவன் வந்தான்.
அவன், தான் உருவாக்கிய புத்தர் சிற்பங்களைக் கடவுள் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றும், எனவே, தான் கடவுளை விட உயர்ந்தவன் என்றும் ஆணவத்துடன் பேசினான்.
அவனை வரவேற்ற மடாலயத்தின் மூத்த துறவி, “தானும் ஒரு சிற்பிதான் என்றும், மற்ற சிற்பங்கள் போலன்றி தன் சிற்பம் நிமிடத்துக்கு நிமிடம் உரு மாறக்கூடியது என்றும், அது ஓரிடத்தில் நிற்காமல் இயங்கக் கூடியது” என்று சொன்னார்.
அதை அந்தச் சிற்பியால் நம்ப முடியவில்லை.
துறவியும் மறுநாள் காலை அவனுக்கு அதைக் காட்டுவதாகக் கூறி அவனை அங்கு தங்கச் செய்தார்.
மறுநாள் காலை துறவி அவனை அழைத்து வந்து காட்டினார். அங்கு ஒரு பெரிய பனிக்கட்டி இருந்தது.
“இதுதான் நான் உருவாக்கிய சிற்பம். இது நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும். இதைப் போன்ற ஆச்சரியமான சிற்பம் எதையும் நீ பார்த்திருக்க முடியாது”என்றார் அந்தத் துறவி.
சிறிது நேரத்தில் பனிக்கட்டி உருகித் தண்ணீராய்ஓடியது.
துறவி, “சிற்பியே, பார்த்தாயா? எனது சிற்பம் ஓரிடத்தில் நிற்காமல் ஓடவும் செய்கிறது” என்றார்.
தண்ணீர் சிறிது நேரத்தில் ஆவியாகி விட்டது.
“இப்போது என் சிற்பம் பிரபஞ்சத்தில் கலந்து விட்டது. இதை விடப் பெரிய கலைப்படைப்பு என்ன இருக்கிறது?”என்று கேட்டார்.
அந்தச் சிற்பிக்கு ஆணவம் ஒழிந்தது. அவன் அந்த மடாலயத்தில் சீடனாய்ச் சேர்ந்து விட்டான்.