ஒரு கஞ்சன் தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான். தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவான். ஆனால் அதிலிருந்து ஒரு ரூபாயைக் கூட எடுத்துச் செலவு செய்யக் கூடாது என்று நினைத்தபடி திரும்பி விடுவான்.
அவன் அடிக்கடி அங்கு சென்று வருவதைக் கவனித்த திருடன் ஒரு நாள் அவன் பின்னாலேயே சென்று, அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டான்.
அவன் சென்ற பின்பு, அந்தத் திருடன் அப்பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு போய்விட்டான்.
மறுநாள் கஞ்சன் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, பணம் காணாமல் போயிருந்ததை நினைத்து அழுது புலம்பினான்.
அவன் புலம்புவதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன், “நண்பா, இதற்காக வருந்தாதே, நீ புதைத்து வைத்த பணத்தை நீ எடுத்துச் செலவிடப் போவதில்லை. பணம் அங்கே இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நீ பணம் வைத்திருந்த இடத்திலேயே அந்தப் பணம் இருப்பதாகவே நினைத்துக் கொள்.வீணாக வருத்தப்படாதே.”என்றான்.
ஒரு பொருள் இருந்தும், அதைப் பயன்படுத்தாவிட்டால், அது இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.