காட்டில் கொம்புள்ள கலைமான் ஒன்று இருந்தது. ஒரு நாள் அது அழகான குட்டி ஒன்றை ஈன்றது.
பிறந்த அந்தக் குட்டியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வளர்த்தது. கொடிய மிருகங்களின் பார்வையில் பட்டுவிடாதபடி மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் அதைப் பாதுகாத்து வந்தது.
அந்தக் குட்டியும் வளர்ந்து பெரியதானது.
எந்தப் பயமுமில்லாமல் துள்ளித்திரிந்த அந்தக் குட்டிமானுக்குத் தாய் மான் தினசரி அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தது.
சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களின் குணங்கள், அவை தாக்கும் முறை, அதில் இருந்து எப்படித் தப்பி ஓடுவது என்று அந்தக் குட்டிமானுக்குச் சொல்லிக் கொடுத்தது.
ஒரு நாள் ஓநாயிடம் இருந்து தப்புவது பற்றிய பேச்சு வந்தது.
அப்போது குட்டி மான், “அம்மா உனக்கு அந்த நாய் உடலை விட பெரிய உடல், அதை விட வேகமாய் ஓடுகிறாய், உனக்குத் தலையில் நீளக் கொம்புகளும் இருக்கின்றன. அப்புறம் ஏன் அதைக் கண்டு பயப்படுகிறாய்?” என்றது.
தாய்மான், “நீ சொல்வதெல்லாம் சரிதான், நான் ஓநாயை விட அதிகமான தகுதியுடையவள்தான். ஆனால், என்ன செய்வது? ஒற்றை ஓநாய் குரைத்தாலும் என் உடல் நடுக்கம் கொள்வதுடன், அதனிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைத்தபடி ஓடும் குணமும் இருக்கிறதே... அதை என்னிடமிருந்து மாற்றிக் கொள்ள முடியவில்லை” என்றது.
எத்தனைதான் தகுதிகள் இருந்தாலும், கோழைக்குத் துணிவு மட்டும் வராது.