அந்த ஊரில் கண்ணுச்சாமியை எல்லோரும் முட்டாள் என்றும், பிழைக்கத் தெரியாதவர் என்றும்தான் சொல்வார்கள்.
இதைக் கேட்டுக் கேட்டு அவருக்கு மிகவும் வெட்கமாகிப் போய்விட்டது.
அந்த ஊருக்குப் புதிதாக வந்த முனிவரிடம் சென்று தனது பிரச்னைக்கு நல்லதாய் ஒரு வழியைச் சொல்லும்படி கேட்டார்.
அந்த முனிவர், “நீ கடவுளை நோக்கித் தவமிரு. அவர் நீ கேட்கும் வரத்தைத் தருவார்” என்று சொன்னார்.
கண்ணுச்சாமியும் கடவுளிடம் தான் வேண்டும் வரத்தைப் பெறுவதற்காகக் கடுமையாகத் தவமிருந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு அவர் கண் முன்னே கடவுள் தோன்றினார்.
கடவுள் அவரிடம், “பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
“எனக்கு ஒரு முனிவர், தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார் என்று சொன்னார்” என்றார் கண்ணுச்சாமி.
“உண்மைதான். உனக்கு என்ன வரம் வேண்டுமோ... அதைக் கேள்...” என்றார் கடவுள்.
“அதுதான் வரம் கொடுப்பீர்களாமே... அதைக் கொடுங்கள்...” என்றார் மன்னார்சாமி.
கடவுளுக்கு மிகவும் குழப்பமாகப் போய் விட்டது.
“கடவுள் பக்தன் முன்பு தோன்றி விட்டால் வரம் கொடுத்தே ஆக வேண்டும்... அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் கொடுக்க வேண்டும், என்ன செய்வது ? என்று கடவுள் யோசித்தார்.
“பக்தனே, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன்...” என்றார் கடவுள்.
“கடவுளே... நான் ஒண்ணும் நினைக்கவே இல்லையே...” என்றார் கண்ணுச்சாமி.
“அதுதான்... நான் உனக்குக் கொடுக்கும் வரம்” என்று சொல்லியபடி கடவுள் மறைந்து விட்டார்.
கண்ணுக்கெதிரே தோன்றிய கடவுளிடம் எதையும் கேட்காமல் ஏமாந்து போனோமே... என்று கண்ணுச்சாமி கவலையடைந்தார்.
ஊரார் சொல்வது உண்மையாகிப் போய்விட்டதே...!