தலைமுடியை வெட்டித் தாடியைச் சீர்படுத்த ஒருவன் முடிதிருத்தகத்திற்குச் சென்றான். சவரத் தொழிலாளி தனது பணியை செய்யத் தொடங்கியவுடன் அவர்கள் இருவரும் பேசத் தொடங்கினர். பல்வேறு விஷயங்களைப் பேசி வந்த அவர்கள் கடவுளைப் பற்றியும் பேசத் தொடங்கினர். “எனக்குக் கடவுளின் மீது நம்பிக்கை கிடையாது” என்று சவரத் தொழிலாளி கூறினான்.
“ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?” என வாடிக்கையாளர் கேட்க, “நீங்கள் தெருவில் நடந்து சென்றால் போதும், கடவுள் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். கடவுள் இருப்பதாக இருந்தால், ஏன் இத்தனை மக்கள் வியாதியுடன் வாழ்ந்து வருகின்றனர்? எப்படி அனாதைக் குழந்தைகள் இருக்கின்றனர்? கடவுள் இருக்கின்றார் என்றால், வலியோ துன்பமோ இருக்கக் கூடாது. அன்புமிக்க கடவுள் இதையெல்லாம் அனுமதிக்கின்றார் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை,” என்று பதில் கிடைத்தது.
ஒரு நிமிடம் யோசித்த வாடிக்கையாளர், வீண் வாதம் செய்ய வேண்டாம் என்று நினைத்து அமைதி காத்தார். சவரத் தொழிலாளி தனது பணியினை நிறைவேற்ற, வாடிக்கையாளரும் கடையை விட்டுச் சென்றார்.
அவர் கடைக்கு வெளியில் வந்த போது, நீண்ட அழுக்கான முடியுடனும் தாடியுடனும் ஒரு மனிதனைக் கண்டார். மீண்டும் கடையினுள் நுழைந்த வாடிக்கையாளர், சவரத் தொழிலாளியிடம், “உங்களுக்கு ஒன்று தெரியுமா? சவரத் தொழிலாளிகள் இல்லவே இல்லை” என்றார். அதைக்கேட்டு ஆச்சரியமுற்ற சவரத் தொழிலாளி, “எப்படி உங்களால் அவ்வாறு சொல்ல முடியும்? நான் ஒரு சவரத் தொழிலாளி, நான் இங்குதான் உள்ளேன். தற்போதுதான் தங்களுக்குச் சவரம் செய்தேன்” என்றார்.
“இல்லை, சவரத் தொழிலாளிகள் இந்த உலகில் இல்லை. அவ்வாறு இருப்பார்களென்றால், வெளியில் உள்ள இந்த மனிதனைப் போன்று நீண்ட அழுக்கான முடியுடனும் தாடியுடனும் யாரும் இருக்க மாட்டார்கள்” என்று வாடிக்கையாளர் பதிலளித்தார்.
“ஓ, சவரத் தொழிலாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள், பிரச்சனை என்னவென்றால், இது போன்ற மக்கள் அவர்களை அணுகுவதில்லை” என்றார் அந்த சவரத்தொழிலாளி.
அவரது பேச்சைச் சரியென்று சொன்ன வாடிக்கையாளர், “ஆமாம். இதுவே கருத்து. கடவுள் இருப்பதும் உண்மைதான். பிரச்சனை என்னவென்றால், மக்கள் அவரைக் கண்டு கொள்வதில்லை. அதனால் மட்டுமே இவ்வுலகில் வலியும் துன்பமும் சேர்ந்திருக்கின்றன” என்றார்..