காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாகக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கணவனும் சரி என்றான்.
சிறிது நேரத்திற்கு பிறகு கணவனின் தாயார் வந்து கதவை தட்டினார். இவன் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலில் எட்டி பார்த்து விட்டு மனைவியைப் பார்த்தான்.
அவள், கதவை திறந்தால் கொன்று விடுவேன் என்பது போல் முறைத்தாள்.
சரி வீட்டில் யாரும் இல்லை போல என்று நினைத்து அவனின் தாயார் சென்று விட்டார்.
மறுபடியும் சிறிது நேரம் கழித்து கதவு தட்டும் சத்தம்.
இந்த முறை மனைவி எழுந்து கணவனைப் போல் ஜன்னலில் எட்டிப் பார்த்தாள். தன் மகளைப் பார்க்கக் கையில் திண்பண்டத்துடன் காத்திருக்கிறார் அவளின் தந்தை. ஆனால், இவளோ கதவு அருகே நின்று அழுது கொண்டிருக்கிறாள். பெண்கள் அழுவது எந்த ஒரு நல்ல ஆண்களுக்கும் பிடிக்காது. ஏன் எதற்காக அழுகிறாய்? என்று கணவன் மிரட்டிக் கேட்க, என் அப்பா என்று கை நீட்டிச் சொன்னபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டு மேலும் கூடுதல் சத்தமாக அழுதாள்.
மெதுவாகச் சிரித்த கணவன், சரி, கதவைத் திற என்றான். அவனைப் பிடித்து இழுத்து அவன் முகத்தில் ஆசையாக முத்த மழை பொழிந்து கதவை திறந்தாள் மனைவி.
ஆண்டுகள் சில சென்று விட்டன.
முதல் குழந்தை ஆண் குழந்தையாகவும், இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாகவும் பிறந்தது.
அவன், பெண் குழந்தை பிறந்த அன்று நண்பர்களையும் ஊர் மக்களையும் உறவினர்களையும் அழைத்துப் பெரும் செலவில் விருந்து வைத்தான். இதைப் பார்த்த மனைவி, ஏன் ஆண் குழந்தைக்கு மட்டும் விருந்து வைக்கவில்லை? என்று கேட்டாள்.
அவள் கையைப் பிடித்துக் கொண்ட கணவன், “நான் வீட்டிற்கு வந்தால் முதலில் பெண் குழந்தைதான் கதவை திறக்கும்” என்று சொல்லிக் கண் கலங்கினான்.
அன்று அவள் செய்த தவறை நினைத்து என்னை மன்னிச்சிருங்க என்று சொல்லி அழுதாள்.
அவனும் அவளைக் கட்டியணைத்துக் கொண்டான்.
பெண்கள் பிறவியிலேயே இரக்கமும் தாய்மையும் கொண்டவர்கள். ஆனால், ஆண்கள் எப்போதுமே பெண்களை நேசிப்பவர்களாய் மட்டும்தான் இருக்கின்றனர். பெண்கள் இதைப் புரிந்து கொண்டால் பிரச்சனைகள் வர வாய்ப்பே இல்லை.