இதிகாசங்கள், புராணங்கள் காலத்திய மிகச் சிறந்த, பெயர் பெற்ற முனிவர் விசுவாமித்திரர். ஆனால் அவருடைய முன் கோபத்தினாலும், பொறாமையினாலும், கடும் தவமியற்றிப் பெற்ற ஆற்றலையும், செல்வாக்கு மிக்க வலிமையையும் அவர் பலமுறை இழக்க நேர்ந்தது.
துவக்கத்தில் அவர் ஒரு அரசராக இருந்த போது, வசிஷ்டர், நினைத்ததை அளிக்க வல்ல தெய்வீகப் பசுவை வைத்திருந்த அந்த முனிவரைப் பார்த்து அவர் பொறாமை பட்டார். பின்னர் அவர் ஒரு ரிஷி ஆன பிறகு, வசிஷ்டர் பெற்ற பிரம்ம ரிஷி பட்டத்தைக் கண்டு, மறுபடியும் பொறாமையோடு ஆத்திரப்பட்டார். வாழ்நாள் முழுதுமாக அவர் தவம் செய்தபோதும் ராஜரிஷி பட்டமே அவர் பெற்றபோது, மனிதர்களும், தேவர்களும் வசிஷ்டரை பிரம்மரிஷி என்று போற்றுவது அவரது கோபத்தை மேலும் கிளர்ந்து எழச் செய்தது . கோபத்தினால் அறிவை இழந்த அவர் வசிஷ்டரைக் கொன்று விடத் திட்டமிட்டார்.
ஒரு இரவில், விசுவாமித்திரர் வசிஷ்டரது குடிலுக்குச் சென்றார். அப்போது, வசிஷ்டர் ஆசிரமத்தில் இல்லை. அவரைத் தேடித் தேடி அலைந்து, இறுதியில், காட்டின் நடுப்பகுதியில் அருந்ததியோடு அவர் இருந்ததைக் கண்டு பிடித்தார். கையில் ஒரு கூரிய கத்தியுடன், ஒரு மரத்தின் பின்னே சிறிது நேரம் மறைந்திருந்தார்.
அப்போது அவர்களிருவரும் பேசிக் கொண்டதை அவரால் தெளிவாகக் கேட்க முடிந்தது.
அருந்ததி தன் கணவரிடம், ”தங்களை மனிதர்களும் தேவர்களும் பிரம்மரிஷி என்று போற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்றாள்.
“உனக்கு அது மகிழ்ச்சியைத் தரலாம். எனக்கு, விசுவாமித்திர முனிவரின் விடாமுயற்சியும், அவரது தவ வலிமையும் பெரிதும் வியப்பைத் தருகிறது. அவர் ஒவ்வொரு முறையும் தான் இழந்ததைப் பெறுவதற்காகச் செய்யும் கடுமையான தவத்தையும், அந்தத் தவத்தால் அவருக்குக் கிடைக்கும் அதிகமான பலத்தையும் கண்டு வியப்படைகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
அதற்கு மேல் விசுவாமித்திரரால் அங்கு நிற்க முடியவில்லை. வேகமாக ஓடிச் சென்று வசிஷ்டரின் கால்களில் விழுந்து வணங்கினார்.
வசிஷ்டர் அவரது தோள்களை அன்புடன் பற்றித் தூக்கி, “எழுந்திருங்கள், பிரம்ம ரிஷியே” என்று சொல்லி எழுப்பினார். இதன் மூலம் விசுவாமித்திரரின் விருப்பம் நிறைவேறியது.
தம்முடைய கோபத்தையும், பொறாமையையும், அகங்காரத்தையும் தவிர்த்த பிறகே, அவர் பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றார்.