ஆற்றங்கரை ஒன்றினருகில் அமைந்திருந்த அந்த ஊரிலிருந்த மக்கள் அனைவரும் வெள்ளை மனம் உடையவர்கள். அவர்கள் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டும் ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஒருவரைக் கொண்டு பாரதம் சொல்லச் செய்து கேட்டு மகிழ்வார்கள். அந்த வருடத்தில் சொற்பொழிவிற்கு ஒருவரை ஏற்பாடு செய்தனர்.
சொற்பொழிவிற்கு வந்தவர் தான் வழிபாடு செய்வதற்காகக் கொண்டு வந்த பாத்திரத்தை (பஞ்ச பாத்திரம்) எடுத்துக் கொண்டு ஆற்றில் குளிக்கச் சென்றார். அந்தக் காலத்தில் கழிப்பிட வசதியெல்லாம் கிடையாது என்பதால், அவர் தான் கையில் கொண்டு வந்திருந்த பாத்திரத்தை ஆற்றங்கரை மணலில் புதைத்து வைத்தார். பின்னர் அந்த இடத்தை அவர் அடையாளம் காண்பதற்காக அந்த இடத்தில் சிறிது மண்ணைக் குவித்து வைத்தார். அதன்பின்னர் அவர் அங்கிருந்து மலஜலம் கழிப்பதற்காகச் சிறிது தூரம் சென்றார்.
அவர் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலர், மலஜலம் கழிப்பதற்குச் செல்லும் முன்பு மணலைக் குவித்து வைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அவர்களும் ஆற்றங்கரையில் சிறிது மணலைக் குவித்து வைத்து விட்டுச் சென்றனர். சொற்பொழிவாளர் திரும்பி வந்து பார்த்த போது, அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான மணல் குவியல்கள் தெரிந்தன. அவருக்குத் தான் புதைத்த இடம் எதுவென்று கண்டுபிடிக்க முடியாமல் போனது. அவர் தனது வழிபாட்டுப் பாத்திரத்தை எடுக்க முடியாமல் திரும்பினார்.
இப்படித்தான் சிலர், அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று கேட்டறியாமல், மூடத்தனமாக, அடுத்தவர் செய்வதைப் பார்த்துவிட்டு, தாங்களும் அப்படியே செய்துவிட வேண்டும் என்று அவர்களாகவே முடிவு செய்து செயல்படுகின்றனர்.