கைலாயத்தில் பார்வதி சிவபெருமானிடம், “சுவாமி, நம் பக்தர்கள் நம்மிடம் எதையாவது வேண்டு வழிபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு ஒரு முறையாவது நேரடியாகக் காட்சியளித்து வருவோம்” என்றார்.
சிவபெருமான் பார்வதியின் கோரிக்கையை மறுத்தார். பின்னர், சரி ஒருமுறை சென்றுதான் பார்ப்போமே என்று நினைத்து அதற்கு ஒத்துக் கொண்டார்.
அவர்களிருவரும் சுய உருவத்துடன் அங்கிருந்த கோயில் ஒன்றுக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களிருவரையும் பார்த்த பக்தர்கள் யாரோ இருவர் இப்படி வேடம் போட்டு வந்திருக்கின்றனர் என்று கேலி பேசினர்.
சிவபெருமானும், பார்வதியும் அந்தக் கோயில் அர்ச்சகரிடம் சென்று, “நாங்களிருவரும்தான் நீங்கள் பூசை செய்து வழிபட்டு வரும் சிவபெருமான், பார்வதி. உங்களுக்கு நேரடியாகக் காட்சியளித்துச் செல்ல வேண்டுமென்பதற்காக இங்கு வந்திருக்கிறோம்” என்று சொன்னார்கள்.
அதைக் கேட்ட அந்த அர்ச்சகர், அவர்களிருவரையும் பார்த்துச் சிரித்தார்.
பின்னர் அவர், “சரி, நீங்களிருவரும் உண்மையில் சிவபெருமான், பார்வதி என்றால் அங்கே குவிக்கப்பட்டிருக்கும் செங்கல்களைத் தங்கக் கட்டிகளாக மாற்றிக் காட்டுங்கள் பார்க்கலாம்” என்றார்.
சிவபெருமானும், அங்கிருந்த செங்கற்களைத் தங்கக் கட்டிகளாக மாற்றினார்.
அங்கிருந்த செங்கற்கள் அனைத்தும் தங்கக் கட்டிகளாக மாறியதைப் பார்த்த பக்தர்கள் அனைவரும் அதைக் கைப்பற்றுவதற்காக ஓடினர். அர்ச்சகரும் அந்தக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றார்.
சிவபெருமானும் பார்வதியும் அதைப் பார்த்து, இனி இங்கு நமக்கு வேலையில்லை என்று நினைத்தபடி கைலாயம் திரும்பினர்.