ஒரு குருவிடம் இரண்டு சீடர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.
அந்தக் குருவும் அவர்களிருவருக்கும் பல ஆண்டுகளாகப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வந்தார்.
பெற்றோர்களை வணங்க வேண்டும், பெரியோர்களை வணங்க வேண்டும். நல்லோர் மனதை நடுங்கச் செய்யக் கூடாது, பலர் செல்லும் வழியை அடைக்கக் கூடாது, அதிகமாக வேலை வாங்கிக் குறைவான கூலியைக் கொடுக்கக் கூடாது.
பச்சை மரங்களை வெட்டக் கூடாது, எளியவர்களைத் திட்டக் கூடாது, இரு நண்பர்களைப் பிரிக்கக் கூடாது, புறங்கூறுதல் கூடாது, மறந்தும் மற்றவர்களுக்குத் தீமை செய்தல் கூடாது. ஒருநாளைக்கு ஒரு நல்ல செயலாவது செய்ய வேண்டும், ஏழை எளியவர்களுக்கு உதவிட வேண்டும்.
நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் மேலிருந்து கடவுள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவரில்லாத இடமே இல்லை, அனைத்து உயிர்களிடத்திலும் அந்தப் பரம்பொருள் நிறைந்து நின்று இயக்கி வருகின்றது. எந்த உயிருக்கும் துன்பம் செய்யும் உரிமை நமக்கு இல்லை. இப்படி பல ஆண்டுகள் ஓடின.
கல்வி முடிவில் குரு இரண்டு சீடர்களையும் சோதித்தறிய விரும்பினார்.
அவர் சீடர்களிருவரிடம் ஆளுக்கொரு சிறிய சிவலிங்கங்கத்தைக் கொடுத்து, இச்சிவலிங்கத்தை யாருக்கும் தெரியாத இடத்தில் வைத்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
சில நாட்கள் கழித்து ஒரு சீடன் திரும்பி வந்தான். அவன் சிவலிங்கத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டு வந்ததாகச் சொன்னான்.
இரண்டாமவன் மேலும் சில நாட்கள் கடந்த நிலையில் திரும்பி வந்தான். குரு கொடுத்தனுப்பிய சிவலிங்கத்தை அவரிடமே திரும்பக் கொடுத்தான். அவன் அவரிடம், “குருவே, யாருக்கும் தெரியாத இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை, எங்கே சென்றாலும், என்னுடன் ஒருவர் இருப்பது போன்ற உணர்வே எனக்கு இருக்கிறது” என்றான்.
அவனே தான் கற்றுக் கொடுத்த முழுக் கல்வியையும் கற்றுக் கொண்டுவிட்டதாகச் சொல்லி அவனைப் பாராட்டினார்.