அரசன் ஒருவன் தனக்கு மதியூக மந்திரி ஒருவர் தேவை என நினைத்தான். அவன் மந்திரிக்கான தேவையை அறிவித்தான்.
அப்பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்று பலரும் அதற்கு விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் பல சோதனைகளை வைத்தான். அந்தச் சோதனையில் கடைசியாக ஐந்து பேர் சமநிலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களில் ஒருவரை தனக்கான மந்திரியாக்க நினைத்த அரசன் அவர்களிருவருக்கும் கடைசியாக ஒரு போட்டியை வைத்தான்.
ஒரு தொட்டி நிறைய தண்ணீர் இருந்தது. அதனருகில் ஐந்து ஓட்டைகளைக் கொண்ட குடம் ஒன்றையும் வைத்தான்.
தொட்டியிலிருக்கும் தண்ணீரைக் கொண்டு அந்த ஓட்டைக் குடத்தை நிரப்ப வேண்டும் என்றான்.
போட்டியில் கலந்து கொண்டவர்கள் அந்தத் தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்து ஓட்டைக் குடத்தில் ஊற்றினார்கள். தண்ணீர் ஓட்டை வழியாக வெளியேறிக் கொண்டே இருந்தது. அவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர்.
கடைசியாக வந்தவன் அந்த ஓட்டைக் குடத்தைக் கையிலெடுத்தான். அவன் அந்த ஓட்டைக் குடத்தை அந்தத் தொட்டிக்குள் மூழ்க வைத்தான். அந்த ஓட்டைக் குடத்திலிருந்த துளைகளின் வழியாகவும் தண்ணீர் நிறையத் தொடங்கியது.
அவனுடைய சமயோசித அறிவைப் பாராட்டிய அரசன் அவனையே தனது மதியூக மந்திரியாகப் பணியமர்த்திக் கொண்டான்.