ஒரு சிறுவன், குருவிடம் சென்று தன்னை அந்தக் குருகுலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டான்.
உடனே அந்த குரு, அவனுடைய பெயர், அப்பா பெயர், அவனுடைய குலம், கோத்திரம் எல்லாம் என்னவென்று சொல் என்று கேட்டார்.
அவன், “சுவாமி, எனக்கு என் அம்மா பெயர் ஜாபாலா என்பது மட்டும்தான் தெரியும். மற்றபடி, நீங்கள் சொல்கிற எதுவும் எனக்குத் தெரியாது” என்றான்.
உடனே அந்த குரு அவனிடம், “சிறுவனே, நீ நேராக உன் வீட்டுக்குச் சென்று, நான் கேட்ட அனைத்தையும் தெரிந்து கொண்டு வா” என்றார்.
அவனும் அங்கிருந்து வீடு நோக்கிச் செல்கிறான். அவன் அம்மாவிடம் குருகுலத்தில் நடந்ததைச் சொல்லி, தன்னுடைய அப்பா பெயர், குலம், கோத்திரம் எல்லாம் கேட்டான்.
அதைக் கேட்ட அவன் அம்மா, “தம்பி, உன் அப்பா யார் என்று எனக்கே தெரியாது, எனவே நம் குலம், கோத்திரம் எல்லாம் தெரியாது” என்றாள்.
அவனும் உடனே குருவிடம் சென்று, அம்மா சொன்னதை அப்படியே சொன்னான்.
குரு அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, “சிறுவனே, இன்று முதல் உன்பெயர் ‘சத்ய காமன்’ (உண்மை நாடுவோன்). இன்றிலிருந்து நீ எனது சீடன். பிராமணன் பொய்யே பேசமாட்டான். ஆகையால் நீயும் ஒரு பிராமண குலத்தில் தோன்றியவன் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.