"நான் பாஸ் பண்ண... நீதான் உதவி செய்யணும்..." என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான் மகேஷ்.
சாமி சிலை முன்னால் 108 தோப்புக்கரணம் போட்டான். கோவில் பிரகாரத்தில் மூன்று முறை சுற்றி வந்தான்.
மகேஷ் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். இப்படிப் பரீட்சை ஏதாவது வந்தால் அன்றைக்குக் கண்டிப்பாய்க் கோவிலில் 108 தோப்புக்கரணம் போடுவான்.
அன்று தான் முதல் பரீட்சை. ஆசிரியர் கேள்வித்தாளைக் கொடுத்தார்.
மகேஷ் சாமியை வேண்டியபடி கேள்வித்தாளைப் பிரித்தான். ஆச்சரியமாக இருந்தது. ஒன்றிரண்டு கேள்விகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
"நான் உனக்கு என்ன குறை வைத்தேன்... ஏன் இப்படி என்னைச் சோதிக்கிறாய்?" என்று மனசுக்குள்ளாகச் சாமியைக் கேட்டான்.
இரண்டாவது பரிட்சைக்குப் போனான். இரண்டாவது பரீட்சை, முதல் பரீட்சையை விட மோசமாக இருந்தது. அவனுக்கு மனது சரியில்லை. மீண்டும் கோவிலுக்குப் போய் சாமியிடம் வேண்டிக் கொண்டான்.
"உன்னை நம்பியவர்களை கைவிட மாட்டாய். என்று சொல்லுகிறார்களே... என்னையும் கைவிட்டுவிடாதே..." என்று வேண்டியபடி பரீட்சை அத்தனையும் எழுதி முடித்தான்.
எந்தப் பரிட்சையும் அவனுக்குத் திருப்தியாக அமையவில்லை. ஆனால் எப்படியும் கடவுள் கைவிடமாட்டார் என்று மட்டும் அவன் நம்பிக்கையாய் இருந்தான்.
அன்று தான் பரிட்சை முடிவு தெரியும் நாள். நேராகப் பள்ளிக்கூடத்திற்கு ஓடினான்.
அங்கு பரிட்சையில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ஒட்டியிருந்தது. அதில் இவன் பெயர் இல்லை. இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேராகக் கோவிலுக்கு ஓடி வந்தான்.
"அந்தி சந்தி எந்த நேரத்திலும் உன்னையே நினைத்திருக்கும்... எனக்கு நீ செய்யும் உதவி இதுதானா?" என்று கேட்டான் சாமியிடம்
சாமி எப்போதும் போல சிலையாக நின்றிருந்தது. அவன் அழுது புலம்பினான்.
அன்று அவன் இரவு வெகுநேரம் கழித்துத்தான் தூங்கினான் .
"உன்னுடைய சந்நதியில் எத்தனைத் தோப்புக்கரணம் போட்டிருப்பேன். என்னைக் கைவிட்டுவிட்டாயே..." என்று தூக்கத்தில் அவன் உதடுகள் முணுமுணுத்தன.
அடுத்த வினாடி வானம் இடிந்து விழுவது போன்ற ஒரு சத்தம். அவன் கண்விழித்துப் பார்த்தான். என்ன ஆச்சரியம்?
கோவிலில் அவன் கும்பிட்ட அதே சாமி. உயிரோடு சிரித்தபடி நின்று கொண்டிருந்தது.
"நான் பரீட்சையில் தோல்வியடைந்து அழுது கொண்டிருக்கிறேன், உனக்கு என் மீது இரக்கமில்லையா?" என்று அழுதபடி கேட்டான் அவன்.
கடவுள் அவன் அருகில் வந்து அவன் கண்களைத் துடைத்து விட்டார்.
"நீ என்னை நம்பியதை விட உன்னை நம்பியிருந்தால், நீ பரீட்சையில் ஜெயித்திருப்பாய்" என்றார் கடவுள்.
"சாமி, என்ன சொல்கிறாய்..."
"ஆமாம் மகேஷ். என்னைச் சுற்றி வந்த நேரத்தில் நீ எனக்குத் தோப்புக்கரணம் போட்ட நேரத்தில் முறையாகப் படித்திருந்தால் நீ வெற்றி பெற்றிருப்பாய்" என்றது சாமி.
மகேஷ் மௌனமாக இருந்தான்.
"கடமையைச் செய்பவன்... கடவுளைக் கும்பிட வேண்டிய அவசியம் இல்லை" என்றார் கடவுள்.
மகேஷ் ஆச்சரியமாகக் கடவுளைப் பார்த்தான்.