ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவரும் ஆளுக்கொரு விதையினை வாங்கிச் சென்றனர்.
அப்படியே தனக்கும் ஒரு விதையை வாங்கிக் கொண்டு சென்ற குமார், தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.
அவன் மனைவியும் தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்குக் கொடுத்து அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.
ஒரு வாரம் கழிந்தது.
நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் குமாரின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது, செடி வளரவில்லை. நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது. அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று புலம்பினான். ஆனால், தினந்தோறும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.
குமார் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்துப் போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனைச் சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்துச் சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
குமாரும் மனைவி சொன்னபடி காலி தொட்டியை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றான். அங்கு அவனுட பணிபுரியும் அனைவரும் கொண்டு வந்த தொட்டி ஒவ்வொன்றையும் பார்த்தான். விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் நல்ல உயரத்தில் வளர்ந்திருந்தன. இவன் தொட்டியைப் பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அவர் ‘அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள். உங்களில் ஒருவர் தான் இன்று மேலாளர் பொறுப்பு ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்’ என்றார்.
அதன் பின்பு அங்கு அலுவலக ஊழியர்கள் கொண்டு வந்த செடிகளை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட்டார்.
குமார் அந்த வரிசையில் கடைசியாக நின்றிருந்தான்.
கடைசி வரிசையில் நின்றிருந்த அவனை முதலாளி அருகே வருமாறு அழைத்தார்.
குமார் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்துப் பயந்து கொண்டே சென்றான்.
முதலாளி அவனிடம், ‘ உன் செடி எங்கே?’ என்று கேட்டார்.
ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாகச் சொன்னான்.
முதலாளி குமார் ஒருவரைத் தவிர, அனைவரும் உட்காருங்கள் என்றார்.
பிறகு குமாரை அருகே அழைத்து நிறுத்தினார். பின்னர் அவர் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “ ஊழியர்களே, நமது நிறுவனத்தின் நிர்வாகத்தை இனொ ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.
குமாருக்கு ஒரே அதிர்ச்சி. தன் தொட்டியில் செடி வளரவே இல்லை, பிறகு ஏன் நமக்கு இந்தப் பொறுப்பைக் கொடுக்கிறார் என்று குழம்பிப் போனார்.
அதைத் தொடந்து அவர், சென்ற வருடம் நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா, அந்த விதைகள் அனைத்தும் வேகவைத்து அவிக்கப்பட விதைகள். அந்த விதையால் முளைத்து வர முடியாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால், அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்துக் கொண்டு வந்தீர்கள். ஆனால், இந்தக் குமார் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் தங்களின் தவறான முயற்சியை நினைத்து வருத்தமடைந்தனர்.
உண்மைக்கும் நேர்மைக்கும் என்று மரியாதை உண்டு.