ஒரு ஊரில் அரிசி வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் அவனது தானியக்கிடங்கில் பெரிய உலோகத்தால் ஆன பெட்டிகளில் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தான். அந்தப் பெட்டிகளில் ஒன்றில் கீழே சிறு ஓட்டை இருந்தது. அதில் இருந்து வந்த அரிசி வெளியே சிதறிக் கிடந்தது.
அந்த வீட்டில் இருந்த இரண்டு எலிகள் இதைப் பார்த்துச் சிதறிக் கிடந்த அரிசியைச் சாப்பிட்டுப் பிழைத்து வந்தன.
இந்நிலையில் அந்த இரண்டு எலிகளில் பேராசை பிடித்த ஒரு எலி மற்றொரு எலியிடம், நாம் இந்த ஒட்டை வழியே உள்ளே சென்று விட்டால், நிறைய அரிசி இருக்கும், வேண்டும் வரை உண்ணலாம் வா என்றது.
ஆனால் மற்ற எலியோ "பேராசை வேண்டாம். இப்போது நமக்குக் கிடைக்கும் அரிசியே போதும் " என்று கூறியது.
அந்த எலியின் பேச்சைக் கேட்காத முதல் எலி, அந்த ஓட்டையின் மூலம் உள்ளே சென்று... அரிசியைச் சாப்பிட ஆரம்பித்தது. இதனால் அது உள்ளே நுழையும் போது இருந்ததை விட கனமாகி விட்டது. அதனால் இப்போது அந்தச் சின்ன ஒட்டையின் மூலம் வெளியே வர இயலவில்லை.
ஒரு நாள் அந்தப் பெட்டியிலிருந்த அரிசியை விற்பனைக்கு எடுத்தான் வியாபாரி.
அப்போது அதில் பதுங்கியிருந்த குண்டு எலியைக் கண்டுபிடித்து அதை அடித்துக் கொன்றான்.
பேராசை கொண்ட எலி இறந்தது.
பேராசை எப்போதும் பெரும் நஷ்டத்தையே தரும்.