தெனாலிராமன் இரவில் படுக்கப் போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்திருப்பதைப் பார்த்தான்.
திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான், தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் அவனைப் பிடிக்க முடியாது.
யோசித்த அவன் மனைவியைக் கூப்பிட்டு வாய் கொப்பளிக்கத் தண்ணீர் கேட்டான்.
அவள் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
அவன் மீண்டும் மீண்டும் தண்ணீர் கேட்க அவன் மனைவியும் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவன் அந்தத் தண்ணீரை ஒவ்வொரு முறையும் புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளித்தான்.
இதனால் கோபமடைந்த அவனது மனைவி ''என்னது... எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்த மாட்டீங்களா...'' என்று கத்தத் தொடங்கினாள்.
''என்னடி, என்னை எதிர்த்தாப் பேசுகிறாய்'' என்றபடி அவன் மனைவியின் மேல் துப்பினான்.
இதைக் கேட்டு மேலும் கோபமடைந்த அவனது மனைவி, ''என் கணவருக்கு என்னமோ ஆகிவிட்டது...''என்று அலறத் தொடங்கினாள்.
தெனாலிராமன் விட்டீல் ஏற்பட்ட கணவன் மனைவி சண்டையினைச் சமாதானப்படுத்துவதற்காகப் பக்க்கத்து வீட்டுக்காரர்கள் அங்கே வந்து சேர்ந்தனர்.
''என்ன தெனாலிராமா, ஏன் உங்களுக்குள் என்ன பிரச்சனை? '' என்று அவர்கள் கேட்டனர்.
''பாருங்கள்... நானும் எவ்வளவு நேரமாக இந்த ஆளின் மீது துப்பினேன். அவன் ஒன்றுமே சொல்லவில்லை, ஆனால், ஒரு தடவை துப்பியதும் இவள் சத்தம் போட்டு ஊரைக் கூட்டி விட்டாள்'' என்றான் தெனாலிராமன்.
அங்கே வந்தவர்கள் திருடனைப் பிடித்தனர்.
தெனாலிராமன் உடல் பலமில்லாவிட்டாலும், அவனின் சிந்தனையால் திருடனை எளிதில் பிடிக்க முடிந்தது.