ஒரு காட்டில் முயல்கள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது.
அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது. எனவே, அவைகள் அனைத்தும் கோழைகளாக இருந்தன.
'வேட்டைக்காரன் வந்ததும் நம்மைத்தான் வேட்டையாடுகிறான். சிங்கம், புலி போன்ற மிருகங்களும் நம்மைத்தான் அடித்து உண்ணுகின்றன. ஆகவே... நம் கூட்டம் இனி உயிர் வாழ்வதில் பயனில்லை, நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஏதேனும் ஒரு குளத்தில் விழுந்து செத்து மடிவோம்' என முயல்களின் தலைவன் கூற அனைத்து முயல்களும் குளத்தை நோக்கிச் சென்றன.
அந்தக் குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் வசித்து வந்தன. அவை கரையில் அமர்ந்திருந்தன. முயல்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த தவளைகளின் தலைவன் 'முயல்கள் கூட்டமாக நம்மைத் தாக்கத்தான் வருகின்றன. நாம் கரையில் இருந்தால் ஆபத்து, உடனே குளத்தினுள் சென்று விடுவோம்' என முடிவு செய்து குளத்தில் குதித்தன.
இதைப் பார்த்த முயல்கள், 'நாம் கோழைகள் தான், நமக்குத் தைரியமில்லைதான்... ஆனாலும், நம்மை விடத் தைரியமில்லாதவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தத் தவளைகள் நமக்குப் பயப்படுகின்றன. அவைகளைப் பொறுத்தவரை அவைகளை விட நாம் தைரியசாலிகள். ஆகவே நாம் செத்து மடியக்கூடாது, இனி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு... நம்மை யாரேனும் தாக்க நினைத்தால் நாலு கால் பாய்ச்சலில் தப்பிப் பிழைப்போம்' என்று கூறின.
உலகில் நம்மை விட தைரியமில்லாதவர்களும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். ஆகவே, நாம் எந்தச் சமயத்திலும் தைரியத்தை இழக்காமல் வாழப் பழகிக் கொள்ளவேண்டும்.