ஒரு நாள் குமார் தன் தந்தையுடன் மலைகள் இருந்த பகுதி ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது கால் தடுக்கி விழ நேரிட்டது.
அவன் வலியால் “ஆ” எனக் குரல் கொடுத்தான்.
“ஆ” என எதிரொலியும் கேட்டது.
குமாருக்கு ஒரே ஆச்சரியம்...
உடனே அவன் “யார் நீ” என்றான்.
பதிலுக்கு “யார் நீ” என்று கேட்டது.
“உன்னைப் பாராட்டுகிறேன்” என்றான்.
அதுவும் அப்படியே கூறிற்று.
அப்பாவிடம் குமார், “அப்பா... என்னது இது?” என்று கேட்டான்.
அவன் அப்பா சொன்னார், “குமார், இதன் பெயர் எதிரொலி, இது நாம் என்ன சொல்கிறோமோ... அதையே திரும்பச் சொல்லும்”
பின்னர் அவர், “குமார், இப்போது, ‘நீ சொல்கிறபடி செய்கிறேன்’ என்று சொல்” என்றார்.
குமாரும் அப்படியே சொல்ல, எதிரொலியும் 'நீ சொல்கிறபடி செய்கிறேன் 'என்றது.
“குமார் இதிலிருந்து நீ ஒன்றைத் தெரிந்து கொள். நல்லதோ... தீமையோ நாம் எதைச் செய்தாலும், அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கும்” என்றார் அவனது அப்பா.