வனவாசத்திற்குப் பிறகு பட்டாபிஷேகம் முடிந்து ராமரும், சீதையும் தனித்து இருந்த சமயம், ராமர் தனது கால்களைப் பிடித்து விடுமாறு சீதையிடம் கேட்டார்.
உடனே அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற முன் வந்தாள் சீதை. ஆனாலும் சற்று தயங்கினாள். யோசித்தாள்.
"சற்றுப் பொறுங்கள்!" என்று ராமரிடம் கூறிவிட்டு, தான் அணிந்திருந்த வளையல்களையும், மோதிரங்களையும் கழற்றி வைத்தாள். பிறகு கணவரின் கால்களைப் பிடித்து விட்டாள்.
இதை கண்டு வியப்படைந்தார் ராமர். சீதை அப்படி செய்ததற்கான காரணம் என்னவென்று கேட்டார்.
சற்றே பயத்துடன் சீதை சொன்னார். "ஐயனே! கொடுங்கோலன் இராவணால், நெடுங்காலமாகப் பிரிந்து இருந்த நாம் இப்போதுதான் ஒன்று சேர்ந்து வாழத் தொடங்கியிருக்கிறோம். இந்நேரத்தில்..." என்றாள்.
“என்ன சொல்கிறாய் நீ?” குழப்பத்துடன் கேட்டார் ராமர்.
அவரைக் கலங்கிய கண்களுடன் பார்த்த சீதை, தங்களின் பாதத்துளி பட்டவுடன், கல்லாக இருந்த அகலிகை பெண்ணாக மாறியது போல், நானும் உங்களது திருப்பாதங்களைப் பற்றியவுடன், எனது வளையல், மோதிரங்களில் உள்ள கற்களில் இருந்து பல பெண்கள் தோன்றி விட்டால் நான் என்ன செய்வது? என்றாள் சீதை.