ஒரு காட்டில் கிழட்டு சிங்கம் வசித்து வந்தது அதனால் போராடும் குணம் குறைந்து கொண்டே வந்தது... இந்த நிலையில் அது நரி ஒன்றின் உதவியை நாடியது.
சிங்கம் நரியிடம், உனது தந்திர மூளையை பயன்படுத்தித் தினமும் ஒரு மிருகத்தைத் தனக்கு உணவாகக் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டது. நரியும் அது உண்டது போகத் தனக்கும் பல வகையான மிருகங்களின் கறி கிடைக்கும் என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டது.
நரியும் தினமும் ஒரு மிருகத்தை தன் தந்திரத்தைப் பயன்படுத்தி அழைத்து வந்து சிங்கத்திற்கு உணவு கொடுத்து வந்தது.
இது நிறைய நாட்கள் நீடிக்கவில்லை, காட்டிலிருந்த மிருகங்களுக்கு நரியின் தந்திரம் தெரிந்து விட்டது. இதனால் நரியின் தந்திரத்துக்குச் சிக்காமல் மிருகங்கள் தப்பித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஒருநாள் நரி எருமை மாட்டிடம் சென்று தன் தந்திரத்தை பயன்படுத்தி, “காட்டுக்கு யார்... ராஜா ...?” என்று கேட்டது.
எருமை அதனிடம், “சிங்கம் தானே ராஜா, இது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டது.
நரியும், “அது நேற்று வரைதான். இன்றுமுதல் உன்னை ராஜாவாக்கச் சிங்கம் நினைத்துள்ளது. அதனால், அது உன்னை அழைத்துவர சொன்னது, அதனால்தான் நான் உன்னை அழைத்துச் செல்ல வந்தேன்” என்று சொல்லித் தந்திரமாக எருமையை அழைத்துச் சென்றது
சிங்கம் கடும் பசியும் கோபமுமாகக் காத்துக் கிடந்தது... அது எருமை அதனருகே வரும் முன்பாக எருமையின் மேல் பாய்ந்தது. சிங்கத்தின் பாய்ச்சலிலிருந்து விலகிய எருமை அங்கிருந்து தப்பி ஓடியது. சிங்கத்தின் அவசரத்தால் அதற்கு உணவு கிடைக்காமல் போனது.
இதைக் கண்ட நரி சிங்கத்திடம், “சிங்கமே, நான் அந்த எருமையை எப்படிச் சொல்லி அழைத்து வந்தேன். அதற்கு முன்பு அவசரப்பட்டு இப்படிச் செய்து விட்டாயே...?” என்று சொல்லித் திட்டியது.
உடனே சிங்கம், “நரியே கோபப்படாதே, நீ எப்படியாவது பேசி அந்த எருமையை இங்கே கூட்டி வந்துவிடு” என்று சொன்னது.
நரியும் சிங்கத்தின் பேச்சைக் கேட்டு, அந்த எருமையைத் தேடிச் சென்றது.
அங்கு காட்டிற்குள் மேய்ந்து கொண்டிருந்த எருமையைப் பார்த்து, “எருமையே, சிங்கம் உன்னை ராஜாவாக்க நினைத்து, உன்னிடம் கை குலுக்குவதற்காக உன்னிடம் வேகமாக வந்தது. அதற்கு முன்பு பயந்து போய் அங்கிருந்து ஓடி வந்து விட்டாயே” என்றது.
எருமை நரியின் பேச்சைக் கேட்காமல் நின்றிருந்தது.
உடனே நரி எருமையிடம், “இப்பொழுது ஒன்றும் கெட்டுவிடவில்லை, நீ என்னுடன் வந்தால் நான் சிங்கத்தைச் சமாளித்து, உனக்கு ராஜா பதவியை மீண்டும் வாங்கித் தருகிறேன்” என்றது.
நரியின் பேச்சில் மயங்கிய எருமை அதன் பின்னால் சென்றது.
சிங்கம் இப்பொது கவனமாக எருமையைக் கொன்று சாப்பிட்டது. சிங்கம் எருமையின் பெரிய காலை சாப்பிட்டு விட்டு, நரியே, நீயும் இந்த எருமையின் கறியைச் சாப்பிடு என்று சொல்லிவிட்டுத் தூங்கியது.
நரிக்கோ மூளைக்கறியென்றால் அதிக விருப்பம். எனவே அது எருமையின் மூளையை சாப்பிட்டது.
சிறிது நேரத்தில் கண் விழித்த சிங்கம், மீண்டும் எருமையைச் சாப்பிடத் தொடங்கியது. அப்போது அது நரியிடம், எருமையின் மூளையைக் காணவில்லையே...? என்றது.
அதைக் கேட்ட நரி சொன்னது, “அந்த எருமை மாட்டுக்கு மூளையிருந்தால், உங்களிடமிருந்து முதலில் தப்பிச் சென்ற அது, நான் மறுபடியும் கூப்பிட்ட போது திரும்ப வந்திருக்குமா...?”