அந்தப் பண்ணையின் முதலாளி அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது.
அவர் தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்து, “இன்று இரவு உணவிற்கு இதைச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.
சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாத அவன் கொக்கின் ஒரு காலை எடுத்துச் சாப்பிட்டு விட்டான்.
“முதலாளி கேட்கமாட்டார், கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்” என்று நினைத்தான் அவன்.
இரவில் முதலாளியும் அவர் நண்பர்களும் சாப்பிட அமர்ந்தனர். அவர்கள் அனைவருக்கும் கொக்குக் கறிக்குழம்பு பரிமாறப்பட்டது.
கொக்கின் ஒரு காலைச் சுவைத்துச் சாப்பிட்ட முதலாளி, “கொக்கின் கால் மிக நன்றாக இருக்கிறது. கொக்கின் இன்னொரு காலை எடுத்துக் கொண்டு வா” என்று சொன்னார்.
தான் தின்று விட்ட கொக்கின் காலைக் கேட்கிறாரே இந்த முதலாளி என்று நினைத்த சமையல்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
உடனே அவன், “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.
நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா, இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.
மறுநாள் பொழுது விடிந்தது.
சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.
“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.
முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று சத்தம் போட்டு விரட்டினார்.
ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது தூரம் தாவிப் பின் பறந்து சென்றன.
“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் முதலாளி.
“ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் “ச்சூ’ என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!” என்று சாமர்த்தியமாகப் பதில் சொன்னான் சமையல்காரன்.
அவனுடைய சமர்த்தான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், “இனியும் இப்படி நடந்து கொள்ளாதே... பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காது. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு, திருடிச் சாப்பிட்டுவிட்டு, அதை மறைக்கப் பொய் சொல்லிக் கொண்டு திரியாதே...” என்றார் முதலாளி.
உடனே முதலாளியின் கால்களில் விழுந்த அவன் தன்னை மன்னிக்க வேண்டினான். முதலாளியும் அவனை மன்னித்தார்.