ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும்போன வழியே திரும்பி வரக் கூடாது"என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.
ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்ததால், முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது" என்று சொன்னான்.
புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதல்!"
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரியகாந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது" என்றார்.
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரியகாந்திச் செடியா? "
சீடன், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டுவிடக் கூடாது என்கிற பயத்தில் முதலில் எனக்கு அழகாகத் தோன்றிய இந்தச் செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நீங்கள் இப்போது சொன்ன நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால், அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்த போதும் பறிக்கவில்லை" என்று சொன்னான்.
இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"