பக்தர் ஒருவர் இறை அடியார்களுக்கு தினமும் உணவளித்து வந்தார்.
ஒரு நாள் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் வந்து அன்னம் வேண்டினார்.
அந்த பக்தர் முதியவரை உணவருந்த உள்ளே அழைத்துச் சென்றார்.
முதியவரோ கைகளைக் கழுவாமல், உடனே அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்.
அதைக் கண்ட அந்த பக்தர் முதியவரிடம், ”கை கால்களைச் சுத்தம் செய்து இறைவனை வேண்டிய பிறகே உணவருந்த வேண்டும்” என்றார்.
அந்த முதியவர் அதை லட்சியம் செய்யாமல் சாப்பிட்டு விட்டுச் சென்றார்.
அன்றிரவு கடவுள் பக்தரின் கனவில் தோன்றி, “இத்தனை வருடம் அந்த முதியவருக்கு யார் உணவளித்தார்கள்?” என்று கேட்டார்.
பக்தர், “எல்லாம் தங்கள் அருள்” என்று பதிலளித்தார்.
கடவுள், “இத்தனை வருடமும் நான் அவருக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லையே? ஒரு நாள் உணவளித்த நீ நிபந்தனை விதிக்கலாமா?” என்று கேட்டார்.
அதைக் கேட்டு வருத்தமடைந்த பக்தர் இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்.