ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளிநாட்டிற்குப் பயணம் செய்தார்.
அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.
கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.
அவர் பார்ப்பதற்குப் படுபயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும், நல்ல உயரமாகவும், கருகருவென்று இருந்தார்.
வியாபாரிக்கு அவர் மீது சிறிது கூட நம்பிக்கை இல்லை.
அவரை நம்பி, அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்குச் சென்று பொறுப்பாளரிடம், ''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை” என்றார்.
பெட்டகக் காப்பாளர் சொன்னார், “பரவாயில்லை,கொடுங்கள், நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று, உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும், சிறிது நேரத்திற்கு முன்பு, இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி, அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்'' என்றார்.