ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான்.
போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.
அவர் திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியைப் பொறுக்க முடியவில்லை. அத்துடன் அவர் கோபம் வேறு பொங்கியது.
அவர் உடனே அந்தப் பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார்.
காவலர்கள் அவனைஇழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர்.
அரச சபை கூடியது.
தனது காயத்துக்குக் காரணமாக இருந்த அந்தப் பிச்சைக்காரனைத் தூக்கிலிடுமாறு தண்டனை கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான்.
சபையில் இருந்தவர்கள் அனைவரும் அவனை திகைப்போடு பார்த்தனர்.
அரசனுக்கோ, கோபம் கூடியது. கோபத்துடன் அவர், ”பைத்தியக்காரனே, மரணம் வரப் போகிறது, பயமில்லாமல் சிரிக்கிறாயே...?” என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
“அரசே, என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் உயிரேப் போகப் போகிறது... அதை நினைத்துத்தான் சிரித்தேன்” என்றான்.
மன்னனுக்குத் தான் செய்தது தவறு என்று தெரிந்தது.
பின்னர் அந்த மன்னன் அவனுக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.