ஓர் ஊரில், அதிகமாகப் பொய் சொல்லும் புளுகுமூட்டை ஒருவன் இருந்தான். அவனுடைய தொழிலே எதற்கெடுத்தாலும் பொய்யாகப் புளுகுவதுதான். இதைப் பெருமையாக நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால், இதற்கு நேர் எதிரான குணங்களோடு... ரொம்ப சாதுவாக, பயந்த சுபாவத்துடன் வளர்ந்தான் அவனுடைய மகன். இது, அந்தப் புளுகுமூட்டைக்காரனுக்கு அவமானமாக இருந்தது.
அவன், ”ஐயோ, நம்ம பையன் இப்படிப் பொய் புளுகத் தெரியாம இருக்கிறானே! நம்ம குடும்பப் பெருமையைக் கெடுத்துடுவான் போலிருக்கே!' என்று சொல்லி, மகனை அடிக்கவும் செய்தான்.
“அப்பா அடித்து விட்டாரே...” என்கிற கவலையிலும்... யோசனையிலும் மகன் மூழ்கிக் கிடக்க, அவனைப் பார்க்க அப்பன்காரனுக்குப் பாவமாகி விட்டது. பையனை குஷிப்படுத்துவதற்காகத் தன் தோள் மீது அவனை உட்கார வைத்துக் கொண்டு, அடுத்த ஊரில் நடந்த திருவிழாவுக்கு அழைத்துச் சென்றான்.
வழியில் ஆறு ஒன்றிருந்தது. அந்த ஆற்றுத் தண்ணீரில் இறங்கி அதைக் கடக்க ஆரம்பித்தான். அப்போது, தண்ணீரிலிருந்து 'டப்' என்றொரு சத்தம் கேட்டது.
“என்னடா சத்தம்?” என்று கேட்டான் அவன்.
“ஒண்ணுமில்லேப்பா! தண்ணியில ’டப்’ன்னு கைய விட்டேன். மீன் மாட்டிக்கிச்சு. அதை அப்படியேப் பிடிச்சுத் தின்னுட்டேன்!” என்றான்.
மகன் இப்படி சொன்னதைக் கேட்டதும்... “ஆகா... நம்ம குலப்பெருமை அழியாதுடா மகனே!” என்று சொல்லியபடி மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டான் அவன்.