ஒரு அரசரின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அரசனுக்கு அடுத்து, அவனுக்கு ஆட்சியைக் கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபையும் எதிர்த்தது.
“என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார்.
பக்கத்து நாட்டில் திறமையான குரு ஒருவர் இருப்பதாகவும், அவர் தன்னிடம் சேர்க்கப்படும் எந்த மக்கு மாணவருக்கும் உரிய கல்வியைப் புகட்டி விடுவார் என்று ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டார். உடனே அந்த அரசர் தன் மகனை அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்.
அந்தக் குருவிடம் ஐந்து ஆண்டுகள் வரை குருகுலத்தில் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் அரண்மனைக்குத் திரும்பி வந்தான்.
அவனது உடை, நடை, பாவனைகள் என அனைத்தும் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று அவனிடம் நிறைய மாற்றங்கள். அந்த அரசருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உடனே அவர் தன் மகனை முதியோர் சபையில் நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட தன் மகனை மீண்டும் அரசனாக்க வேண்டுமென்று நினைத்தார். முதியோர் சபையிலிருந்த பலரும் அவனுடைய நடவடிக்கைகள் அனைத்தும் மாறியிருந்ததால். அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். அந்தக் குருவின் திறனை அனைவரும் பாராட்டினர்.
ஒரு வயதானவர் மட்டும் அந்த இளவரசனைச் சோதித்துப் பார்க்க வேண்டுமென்று நினைத்தார்.
அவர் இளவரசனை அழைத்து அவனிடம், “என்ன படித்தாய்?” என்று கேட்டார்.
அவன், தான் நிறைய கற்றுக் கொண்டிருப்பதாகவும், சோதிடமும் கூடுதலாகக் கற்றிருப்பதாகவும் சொன்னான். அவன், “நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூட என்னால் அதற்குச் சரியான பதில் சொல்ல முடியும்” என்றான்.
அந்த வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, “இது என்ன?” என்றார்.
இளவரசன் சிறிது நேரம் யோசித்தான். பின்னர் ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். “உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது” என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. இருப்பினும், “அடையாளங்களைச் சொல்கிறாயே தவிர, அது என்னவென்று சொல்லக் கூடாதா?” என்றார்.
உடனே அவன், “அது, எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை” என்றான்.
“சிந்தித்துச் சொல்” என்றார் அந்த வயதானவர்.
உடனே இளவரசன் “பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும், என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்... அது ஒரு வண்டிச் சக்கரம்” என்றான்.
உடனே அந்த வயதானவர், “முட்டாள். குரு சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால், வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் மறைத்து வைக்க முடியாது என்ற அடிப்படையைக் கூடத் தெரியாமலிருக்கிறானே” என்று நினைத்து வருத்தப்பட்டார்.
முட்டாளைப் படிக்க வைத்து விட முடியும், ஆனால் அவனை அறிவாளியாக்க முடியாது என்பது நன்றாகத் தெரிந்தது.