ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று, “மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?” என்று கேட்டான்.
ஞானி அவனிடம், “ஒரு காலை உயர்த்தி, மறு காலால் நில்” என்றார்.
கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.
ஞானி “சரி, அந்த இன்னொரு காலையும் உயர்த்து” என்று சொன்னார்.
அவனுக்குக் கோபம் வந்து விட்டது. அவன் கோபத்தோடு, “இரண்டு காலையும் உயர்த்திக் கொண்டு எப்படி ஐயா நிற்க முடியும்?” என்று கேட்டான்.
ஞானி அமைதியாகச் சொன்னார்.
“நான் காலைத் தூக்கச் சொன்ன போது, எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒரு சேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. வாழ்க்கையில் ஒரு பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதியே தீர்மானிக்கிறது"
அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.