வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை
குருவிடம் வந்தான் ஒருவன். “குருவே, என்னால் மகிழ்ச்சியாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டு இருக்கு” என்றான் வந்தவன்.
“அப்படியா?” என்று கேட்டார் அந்தக் குரு.
அவன், “ஆமாம் குருவே. எனக்கு மட்டுமே இப்படி இருக்கிறது. என் பக்கத்து வீட்டுக்காரன் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். அவனுக்கு மட்டும் எந்தக் கவலையுமில்லை. எனக்கு அது எப்படி என்று தெரியவில்லை. என்னால் அப்படி இருக்கவும் முடியவில்லை” என்றான்.
சிறிது நேரம் சிந்தித்த குரு, பின்னர் அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
“இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கின்றன. இதை விடியற்காலையில், உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு வந்து சொல்” என்றார்.
குரு சொன்னபடியே அவனும் செய்தான். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்த அவன், “குருவே, இப்போது என் பக்கத்து வீட்டுக்காரனும் என்னைப் போலாகி விட்டான். அவனுக்கும் இப்போது நிம்மதியில்லை” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட குரு, “ஏன், அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்கிறதே” என்றார்.
“அதுதான் சாமி பிரச்சனையே. நான் நீங்கள் சொன்னபடி, விடியற்காலையில் அவன் வீட்டு வாசலில் தங்கக்காசுப் பையைப் போட்டுவிட்டேன். காலையில் அந்தப் பையை எடுத்த அவன் முதலில் மகிழ்ச்சியடைந்தான். பின்னர், அதில் அதில் ஒரு காசு குறைகிறதே என்று கவலையடைந்தான். பத்தாவது காசு பக்கத்தில்தான் இருக்கும் என்று அந்த இடம் முழுக்கத் தேடினான். பின்னர் அந்தப் போவோர் வருவோரிடமெல்லாம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு இப்போது அந்தப் பத்தாவது காசை எப்படியாவது எடுத்து விட வேண்டுமென்று தேடிக் கொண்டிருக்கிறான்” என்றான்.
“இப்போது புரிகிறதா? இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைய வேண்டும். அதை விட்டுவிட்டு, இல்லாததைத் தேடிக் கொண்டேயிருந்தால் மகிழ்ச்சி மட்டுமில்லை வாழ்க்கையும் சேர்ந்து போய்விடும்” என்றார் அந்தக் குரு.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.