ஒரு ஜென் மடாலயத்தில் மௌனம் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அங்கு இருக்கும் யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், அவர்கள் பத்து வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசலாம் என்று ஒரு விதிமுறையும் இருந்தது.
புதிதாக ஒரு துறவி அங்கு வந்து வசிக்கத் தொடங்கினார்.
பத்து வருடக் காலம் கழிந்தது. அவரை அழைத்த தலைமைத் துறவி, "நீ வந்து பத்து வருடம் ஆகி விட்டது. நீ இரண்டு வார்த்தைகள் பேசலாம். என்ன வார்த்தைகளைக் கூற விரும்புகிறாய்?" என்று கேட்டார்.
அதற்கு அந்தத் துறவி, "படுக்கை... கடினம்..." என்றார்.
"அப்படியா" என்றார் அதைக் கேட்ட தலைமைத் துறவி.
பத்து வருடங்கள் கழிந்தன. அந்தத் துறவியை மீண்டும் தலைமைத் துறவி அழைத்தார்.
அப்போது தலைமைத் துறவி அவரிடம், “நீ பேச விரும்பும் இரண்டு வார்த்தைகளைப் பேசலாம்" என்றார்.
உடனே துறவி, "உணவு... மோசம்..." என்றார்.
அதைக் கேட்ட தலைமைத் துறவி " அப்படியா?" என்றார்.
இன்னும் பத்து வருடங்கள் கழிந்தன.
துறவி மறுபடியும் தலைமைத் துறவியின் அறைக்கு அழைக்கப்பட்டார்.
"நீ பேச விரும்பும் இரண்டு வார்த்தைகளைச் சொல்" என்றார் அவர்.
"நான்... போகிறேன்..." என்றார் அவர்.
உடனே தலைமைத் துறவி, "சரி! நீ ஏன் போக விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும். நீ எப்போதும் சொல்ல விரும்புவது புகார்தான்!" என்றார்.