ஒரு கிராமத்தில் ஓநாய் ஒன்று தன் குட்டியுடன் வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் அந்த ஓநாய்க்குட்டி தன் தாயிடம், "எனக்கு மனிதனுடைய இறைச்சியைச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. எனக்கு இப்போதே மனித இறைச்சியைக் கொண்டு வா" என்றது.
ஓநாய் அலைந்து திரிந்தும் மனித இறைச்சி கிடைக்காததால், வழியில் கிடைத்த பன்றியைக் கொன்று, அதன் இறைச்சியைக் கொண்டு வந்து கொடுத்தது.
அதை நுகர்ந்து பார்த்த குட்டி, "இது பன்றி இறைச்சி போலிருக்கிறது. எனக்கு இந்தப் பன்றியின் இறைச்சி வேண்டாம். எனக்கு மனித இறைச்சிதான் வேண்டும்” என்று அடம் பிடித்தது.
மீண்டும் அலைந்து திரிந்த ஓநாய் மனித இறைச்சி கிடைக்காமல், அந்தப் பக்கமாக வந்த மாட்டை அடித்துக் கொன்று அதன் இறைச்சியைக் கொண்டு வந்து கொடுத்தது.
அந்த இறைச்சியும் மாட்டு இறைச்சி என்பதைத் தெரிந்த அந்தக் குட்டி, தனக்கு மனித இறைச்சிதான் வேண்டும் என்று அழத் தொடங்கி விட்டது.
அந்த ஓநாய், மனித இறைச்சிக்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்துப் பார்த்தது. அதற்கு ஒரு திட்டம் சரியானதாகத் தோன்றியது. அதைச் செயல்படுத்த முடிவு செய்தது.
அன்றிரவு அந்த ஓநாய், தன் குட்டி சாப்பிட மறுத்த பன்றி இறைச்சியைப் பள்ளிவாசலிலும், மாட்டிறைச்சியைக் கோயிலிலும் வைத்துவிட்டு வந்துவிட்டது.
மறுநாள் காலை அங்கு வழிபாட்டுக்குச் சென்று பார்த்தவர்கள், தங்கள் வழிபாட்டுத்தலத்திலிருந்த இறைச்சியை முன்னிறுத்திச் சண்டையிட்டுக் கொண்டதில் ஊர் முழுவதும் மனித உடல்கள் சிதறிக் கிடந்தன.
அந்த ஓநாயும் குட்டியும், மனித இறைச்சியைச் சாப்பிட்டுத் தங்கள் பசியையும், ஆசையையும் தீர்த்துக் கொண்டன.
பின்னர் அந்தக் குட்டி ஓநாயிடம், “இது எப்படி நடந்தது?” என்று கேட்டது.
அதற்கு அந்த ஓநாய், "பெரும்பான்மையான முட்டாள்கள் வாழும் இடங்களில் இதுபோன்ற செயல்கள் எல்லாம் எளிமையாக நடக்கும்" என்று சொல்லிச் சிரித்தது.