ஒருவன் குளத்தின் அருகில் சிறிய கற்களை அடுக்கி வைத்து, அதிலிருந்து ஒவ்வொரு கல்லாக எடுத்து அந்தக் குளத்திற்குள் போட்டுக் கொண்டிருந்தான்.
அந்த வழியாகப் போனவர்கள் அனைவருக்கும் அவன் ஏன் இப்படிக் கல்லைக் குளத்திற்குள் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டிருக்கிறான் என்று சந்தேகம் எழுந்தது.
அவர்களில் சிலர் அவனிடம் குளத்தில் கல்லைப் போட்டுக் கொண்டிருப்பது ஏன் என்று கேட்டார்கள். அவன் அவர்கள் கேள்விக்குப் பதில் சொல்லாமல், கற்களின் எண்ணிக்கையைக் கூட்டியபடி குளத்தில் கல்லைப் போட்டுக் கொண்டிருந்தான்.
அவன் இப்படிக் குளத்தில் கற்களைப் போடறதும், அந்த வழியில் செல்பவர்கள் கேள்வி கேட்டதும், அவன் குளத்தில் போடும் கற்களின் எண்ணிக்கையை அதிகரித்துச் சொல்வதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் அவனிடம் வந்து, "தம்பி நான் கேட்பதைத் தப்பாக நினைக்காதே, இப்படி இவ்வளவு கற்களைக் கொண்டு வந்து வைத்து, ஒவ்வொன்றாகக் குளத்தில் போட்டுக் கொண்டிருக்கிறாயே, உனக்கு வேறு வேலை இல்லையா? நீ, இப்படி செய்வது உனக்கு வெட்டி வேலையாகத் தெரியவில்லையா?” என்று கேட்டான்.
சிறிது நேரம் பேசாமலிருந்த அவன், "இந்த உலகத்தில் யாரும் வெட்டின்னு செய்வது இல்லை, அவனவன் செய்கிற வேலையைப் பற்றி அவனுக்குத் தெரியும். எனக்குத் தெரிஞ்சு உலகத்திலேயே வெட்டி வேலை அப்படின்னு சொன்னால், அடுத்தவன் என்ன செய்கிறான்? ஏன் செய்கிறான்? அப்படின்னு உங்களைப் போன்று ஆராய்ச்சி செய்து கேள்வி கேட்கிறவர்கள் செய்கிற வேலையைச் செய்வதைத்தான் சொல்வேன். அப்படிப்பட்ட ஆட்கள் இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நான் எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.
இவ்வளவு நேரமாக இதைப் பார்த்துக் கேள்வி கேட்ட எல்லோரையும் வேலை வெட்டி இல்லாதவன் ஆக்கி விட்டு அவன் அங்கிருந்து எழுந்து போனான்.