மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம், போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம் அது.
இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.
அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது தேரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று அந்த புத்த பிட்சுவின் காலில் விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.
ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்குக் கஷ்டமாகப் போய்விட்டது.
‘ஒரு நாட்டின் சக்கரவர்த்தி, உலகமே வியக்கும் ஒரு பேரரசன், இந்தத் துறவியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்தபடி மனதிற்குள் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.
அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார்.
உடனே அவர் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் அமைச்சரிடம், “அமைச்சரே, ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு வேண்டும். உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
நாம் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல், மன்னர் மூன்று தலைகளைக் கொண்டு வரச் சொல்கிறாரே... என்று நினைத்தபடி படைவீரர்கள் சிலரை அழைத்து மூன்று தலைகளையும் கொண்டு வரச் சொன்னார்.
படைவீரர்களுக்கு ஆட்டுத் தலை கறிக்கடையிலேயே கிடைத்தது.
புலித்தலைக்கு சிறிது அலைந்தாலும் ஒரு வேட்டைக்காரனிடம் அதை வாங்கி வந்து விட்டார்கள்.
ஆனால் மனிதத் தலை கிடைக்கவில்லை. உயிரோடிருப்பவனை வெட்டித் தலையை எடுத்தால் அது கொலையாகி விடும். என்ன செய்யலாம்? என யோசித்த அவர்களுக்கு, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டு வந்த ஒரு பிணத்தில் தலையை மட்டும் துண்டித்து எடுத்துக் கொண்டனர்.
மூன்று தலைகளும் அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது.
அந்தத் தலைகளைப் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்றுப் பொருளாக்கி வந்து விடுங்கள்” என்றார்.
மன்னரின் ஆணைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு அதற்கான பொருளைப் பெற்றுக் கொண்டனர்.
புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் அதை ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிப்பதற்காக நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.
மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் படை வீரர்கள்.
மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.
“அப்படியா, சரி யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்” என்றார் மன்னர்.
நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனைப் பெற்றுக் கொள்ள யாரும் முன் வரவில்லை.
விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் அமைச்சரைப் பார்த்து, “அமைச்சரே, இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்று கேட்டார்.
அமைச்சர் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார்.
“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே... வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா... ஆனால் நடைமுறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அதைப் பார்த்து அருவருப்புடன் ஓடுகிறார்கள்... இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள். இருந்தாலும், இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது, செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி!” என்றார்.
அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!