ஒருவன் தானதருமம் செய்வதில் விருப்பம் கொண்டு தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்ய ஆரம்பித்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் மனைவி "தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்வதால் யாருக்கு என்ன லாபம்? தினம் கடுகளவு தங்கம் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வாருங்கள். மொத்தமாகச் சேர்ந்தவுடன் அதை உருக்கி யாருக்காவது கொடுக்கலாம்" என்றாள்.
அவனும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். கடுகு, மிளகு, நெல்லிக்காய், விளாம்பழம் என்று பொன்னின் அளவு அதிகமாகிக் கொண்டே போனது. அவ்வப்போது உருக்கி உருண்டையாக்கிக் கொண்டே வந்தான்.
ஒருநாள் அவனுக்கு பெரிய நோய் ஏற்பட்டது. பேச்சு வராமல் படுக்கையில் விழுந்தான். தான் இறப்பதற்கு முன்பாக அந்தப் பொன் உருண்டையை யாருக்காவது தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அதை அவன் தன் மனைவியிடம் சைகையில் தெரிவித்தான்.
அவன் சொல்வது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் அவ்வளவு பொன்னை தானமாகக் கொடுக்க அவளுக்கு மனமில்லை.
"அப்பா என்ன சொல்கிறார்?" என்று மகன்கள் கேட்க, அவளும் சாமர்த்தியமாக "உங்க அப்பாவிற்கு விளாம்பழம் சாப்பிட ஆசையாக இருக்கிறதாம்..." என்று கூறி மழுப்பினாள்.
உடனே மகன்களும் வாங்கித் தந்தார்கள். விளாம்பழம் தொண்டையில் சிக்கி அந்த மனிதன் இறந்து போனான்.
சிறிதோ, பெரிதோ தானம் கொடுக்கும் எண்ணம் வந்தால் நமக்கோ பிறருக்கோ மனம் மாறும் முன் செய்து விட வேண்டும்.