“குருவே, வாழ்க்கை மிகவும் சிரமமாயிருக்கிறது. கவலை, கஷ்டம், வருத்தம் இவைதான் நிறைந்திருக்கிறது.” என்றான் அவரைப் பார்க்க வந்த ஒருவன்.
அதைக் கேட்ட குரு, “அப்படியா?” என்றார்.
அவன், “ஆமாம் குருவே. வாழ்க்கை இன்பமாகவே இருக்க ஏதாவது வழியிருக்கிறதா? எனக்கு அதைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றான்.
குரு அவனிடம், “காபி சாப்பிடுகிறாயா?” என்று கேட்டார்.
வந்தவ்னும் அதைக் கேட்டுத் தலையசைத்தான்.
குரு உள்ளே சென்று, ஒரு கிண்ணத்தில் காபித்தூள் கொண்டு வந்தார்.
“இந்தா, சாப்பிடு...” என்று காபித்தூளைக் கொடுத்தார்.
வந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இதைச் சாப்பிட்டுக் கொண்டிரு, பாலைக் கொண்டு வருகிறேன்” என்று உள்ளே சென்று, இன்னொரு கிண்ணத்தில் பாலைக் கொண்டு வந்தார்.
அதை வாங்கிக் கொண்ட அவன் விழித்தான்.
பிறகும் உள்ளே சென்ற அவர், இன்னொரு கிண்ணத்தில் தண்ணீர், சர்க்கரை எல்லாம் கொண்டு வந்தார்.
“குருவே, இவற்றை எப்படி தனித்தனியே சாப்பிடுவது?” என்று கேட்டான் அவன்.
உடனே குரு, “காபியையே உன்னால் எப்படித் தனித்தனியாகச் சாப்பிட முடியாதோ... அப்படித்தான் நம் வாழ்க்கையும், அதிலிருக்கும் இன்பம், துன்பம் என்று ஒவ்வொன்றையும் பிரித்துப் பார்க்க முடியாது” என்றார்.