சத்திய விரதன் என்கிற மன்னன் ஒருநாள், பிரும்ம முகூர்த்த நேரத்தில் புனித நீராடப் புறப்பட்டான்.
அப்போது ஓர் அழகிய பெண் நகர வாயிலைக் கடந்து போவதைக் கண்டான்.
“யாரம்மா நீ...?”
“நான் தான் தனலட்சுமி. ஓரிடம் நில்லாதவள்” என்றாள் அவள்.
அரசன் அவளைப் போக அனுமதித்தான்.
அடுத்ததாக ஓர் ஆணழகன் வெளியேறினான்.
“யாரப்பா நீ... ?” என்று கேட்டான் அரசன்
“நான் தான் தர்மதேவன். செல்வம் போனபின் எனக்கு என்ன வேலை ? என்னைப் போகவிடு...” என்றான் அவன்
அரசன் அவனையும் போக அனுமதித்தான்.
சிறிது நேரத்தில் இன்னொருவன் வெளியேறினான்.
“யார் நீ...? ஏன் போகிறாய் ...?"
“நான் சதாசரண். நற்பண்புகளுக்கு அதிபதி. செல்வமும், தர்மமும் சென்றபின், எனக்கு இங்கு வேலையில்லை, என்னையும் போகவிடு...” என்றான் அவன்.
அவனுக்குப் பின் அங்கு வந்த புகழ், “நற்பண்புகள் இல்லாமல், இங்கு நான் எப்படி இருக்க முடியும் என்னையும் போக விடு” என்றான்.
“ஓ... அப்படியா? நீயும் போய்வா..!” என்றான் மன்னன்.
சிறிது நேரத்தில் ஒளிமயமான ஒருவன் தோன்றினான். அவன், “நான் சத்தியம் (உண்மை). என்னையும் இங்கிருந்து போகவழி விடு” என்றான்.
உடனே மன்னன், “மற்ற யார் வெளியேறினாலும் எனக்குக் கவலையில்லை ஈடு செய்துவிடுவேன். ஆனால், நீ வெளியேறிவிட்டால் அதை நான் எப்படி ஈடு செய்வேன்? நீ மட்டும் இங்கிருந்து போகாதே... வெளியேறாதே... உள்ளே போ...” என்று கெஞ்சினான்.
அவனுடைய வேண்டுதலுக்கு மனமிரங்கி சத்தியம் மறுபடியும் திரும்பிப் போயிற்று.
அடுத்த கணம், ஏற்கனவே வெளியேறிச் சென்ற புகழ், சதாசரண், தர்மதேவன், தனம் ஆகிய அனைவரும் திரும்பினர். அவர்கள், “சத்தியம் (உண்மை) எங்கிருக்கிறதோ... அங்கேதான் நாங்கள் இருப்போம், சத்தியம் (உண்மை) இல்லாமல் எங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது” என்று சொல்லி மீண்டும் அந்த நகருக்குள் திரும்பினர்.
ஓ இதைத்தான் சத்தியமே வெல்லும் என்று சொல்கிறார்களோ...?