துறவி ஒருவர் கடவுளைக் காண விரும்பித் தவம் இருந்தார். நீண்டகாலம் ஆயிற்று. கடவுள் காட்சி தரவில்லை. எனவே அவருக்குத் தவத்தில் ஆர்வம் குறைந்துவிட்டது. அவர் மனம் பணத்தை நாடியது.
வழியில் ஒரு திருடனைக் கண்டார். அவர் அவனிடம் அறிமுகமாகிக் கொண்டார்.
திருடன் துறவியிடம், “என்னுடன் வாருங்கள். கிடைப்பதில் ஆளுக்குப் பாதி” என்றான்.
அதற்குத் துறவியும் சம்மதித்தார்.
பகலிலேயே அரண்மனைக்குள் நுழைந்து, இருவரும் அரண்மனையில் திருடப் போனார்கள். நந்தவனத்தில் போய் ஒளிந்து கொண்டனர்.
நேரம் கடந்தது. திருடன் சுற்றுப்புறத்தைப் பொறுமையுடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்தான்.
துறவியிடம் பொறுமையில்லை, "எத்தனை நேரம் இப்படிக் காத்திருப்பது?" என்றார்.
அதற்குத் திருடன், "இரவு வரட்டும். பொறுமையாக இருங்கள்" என்றான்.
மெல்ல மெல்ல இருள் கவிழ்ந்தது. அதன் பிறகும் திருடன் கிளம்பவில்லை. ஒரு வழியாக நள்ளிரவு பன்னிரெண்டு மணியைத் தாண்டி விட்டது. உடனே, திருடன் சுறுசுறுப்பு அடைந்தான். அவன் அரண்மனைக்குள் நுழையத் தயாரானான்.
ஆனால், துறவியால் அவனுடன் செல்ல முடியவில்லை. காத்திருந்து காத்திருந்துக் களைத்துப் போயிருந்த அவர் தன் நிலையை எண்ணிப் பார்த்தார்.
அவருக்குப் பல உண்மைகள் புரிந்தன.
சட்டென்று, “குருதேவா!” என்றவாறு திருடனின் கால்களில் விழுந்து விட்டார். திருடன் விழித்தான்.
"திருட்டுத் தொழில்தான் என்றாலும் நீங்கள், அதில் காட்டும் தீவிரக் கவனத்தையும், மன ஒருமைப்பாட்டையும் எனது தவத்தில் நான் காட்டவில்லை. எந்தச் செயலிலும் வெற்றிக்கு உண்மையான வழி, ஒன்றுபட்ட மனமும் பொறுமையும்தான் என்பதை எனக்குப் புரிய வைத்து விட்டீர்கள். எனவே நீங்கள்தான் என் குரு" என்று கூறிவிட்டு, மீண்டும் தவம் செய்யக் கிளம்பினார் அந்தத் துறவி.