தீமைகளை மட்டுமே செய்யக்கூடைய சாத்தான் ஒரு உத்தமமான முனிவருடன் விளையாட விரும்பினான்.
அந்த முனிவர் மிகவும் நல்லவர். அவர் முன்பு, ஒரு அழகான பெண், ஒரு சிறு குழந்தை, ஒரு மதுப்புட்டி இந்த மூன்றையும் வைத்த சாத்தான் முனிவரிடம், “நான் சொல்லும் மூன்று பாவச்செயல்களில் ஏதாவது ஒன்றைச் செய்தால் மட்டுமே நீ என்னிடமிருந்து தப்ப முடியும். இல்லையேல் உனது தலை உன் உடம்பில் இருக்காது” என்று மிரட்டினான்.
“என்ன செய்யச் சொல்கிறாய்?” என்று முனிவர் கேட்டார்.
அதற்குச் சாத்தான், “உனக்கு முன்பாக இருக்கும் குழந்தையைக் கொல்ல வேண்டும் அல்லது பக்கத்தில் இருக்கும் பருவ மங்கையை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் அல்லது அருகில் இருக்கும் மதுப்புட்டியிலுள்ள மதுவைக் குடித்துக் காலி செய்ய வேண்டும். மூன்றில் ஏதாவது ஒரு பாவச் செயலைச் செய்தால்தான் உன்னை உயிரோடு விடுவேன்” என்றான்.
முனிவருக்கு தர்மசங்கடமான சூழ்நிலை.
பச்சிளங் குழந்தையைக் கொல்வது பெரும்பாவம், அது கருணையற்ற செயல் என்று அவரது உள் மனம் அதற்கு உடன்படவில்லை. அதுபோல அப்பாவிப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய மனம் மறுத்துவிட்டது. மதுப்புட்டியைக் காலி செய்வதால் நாம் மட்டும்தான் முழுவதுமாக பாதிக்கப்படுவோம். மற்றவர்களுக்குப் பாதிப்பில்லை எனக் கருதிய முனிவர் மதுப்புட்டியில் இருந்த மதுவைக் குடித்தார்.
மது போதை தலைக்கேறியது. போதையில் பக்கத்திலிருந்த மாதுவைப் பார்த்ததும் முனிவருக்குக் காம உணர்வு ஏற்பட்டதால் பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயன்றார். அதைக் கண்டு அருகிலிருந்த குழந்தை மிரண்டு அழ ஆரம்பித்தது. அதன் அழுகை முனிவருக்கு இடையூறாக இருந்ததால் காமவெறியால் அந்தக் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்தார்.
மது மயக்கம், மதியை மயக்கி ஒரே சமயத்தில் மூன்று பாவச்செயல்களையும் செய்ய வைத்தது.