வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தான் ஒருவன். வாழ்க்கையில் விரக்தி ஏற்படவில்லை, மாறாக தம்மைச் சுற்றியுள்ள உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டுக் காட்டிற்குச் சென்றான். போகும் வழியில் மற்றவர்களின் குறைபாடுகள், பேசிய பேச்சுக்கள், நடந்து கொண்ட முறைகள் எல்லாமே அவனது நினைவுக்கு வந்தன.
இறைவனை நினைத்து, மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்ய ஆரம்பித்தான். வாழ்க்கையில் நலம் பல விளைய வேண்டும் என்று மனதில் உறுதிப்படுத்திக் கொண்டான். பல ஆண்டுகள் விடாமல் தவம் செய்தான். இறுதியில் இறைவன் அவன் முன்பு தோன்றினார்.
"இறைவனே! வாழ்க்கையில் இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தும் மனதில் நிம்மதியில்லை. மேலும் பல ஆண்டுகள் வளமாக வாழ ஆசைப்படுகிறேன் வரம் தர வேண்டும்" என்று வேண்டினான்.
இறைவனும், "அப்படியா சரி! இதோ இந்தப் பையை உன் கழுத்தில் தொங்க விடுகிறேன் இன்னொரு பையை முதுகுப்பக்கமாகத் தொங்க விடுகிறேன்" என்றார்.
அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவன் இறைவனிடம், “இறைவனே, நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
இறைவன் மெதுவாக அவனிடம், “முதுகில் உள்ள பையில், மற்றவர்களின் குறைகள் நிரப்பப்படுகின்றன. அவற்றை நீ பார்க்கக் கூடாது. அதனால் முதுகில் அந்தப்பை. கழுத்தில் உள்ள பையில் உன் குறைகள் நிரப்பப்பட்டிருக்கின்றன. முதுகுப்பையை நீ பார்க்க முடியாது. மற்றவர்களின் குறைகளைப் பார்த்தால் உனக்கு வேதனையும், துன்பமும்தான். ஆனால் உன் கழுத்துப்பையில் உள்ள உன் குறைகளைப் பார்த்தால், அவற்றை நீக்க முயற்சி செய்து முன்னேறப் பாடுப்பட்டு, வெற்றியைப் பெறமுடியும். உனக்கு வாழ்வில் அமைதியும், வளமும், நலமும் கிடைக்கும்" என்று சொல்லி மறைந்தார்.