பிரம்மதேவன் புடைசூழ அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானைத் தரிசிக்க வந்தனர்.
பிரம்மதேவன் 'ஐய்யனே ! அனலாசுரன் என்கிற அசுரன் நம் தேவர்களுக்கு மிகவும் துன்பம் தந்து கொடுமைப்படுத்துகிறான். நாளாக, நாளாக அவன் தரும் தொல்லைகளுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது" என்றார்.
மற்ற தேவர்களும் விநாயகரை அடிபணிந்து, "பிரபோ, அந்த அசுரன் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அசுரனின் வாயிலிருந்து நெருப்பு வருகின்றது. அப்படியே பொசுக்கி விடுவான் போல இருக்கிறது. எங்களைக் காத்தருள வேண்டும். ஏற்கனவே பல அரக்கர்களை அழித்து எங்களைக் காப்பாற்றியுள்ள நீங்கள், இந்த அரக்கனையும் கொன்று எங்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.
விநாயகர் அவர்கள் கூறுவதைக் கேட்டுக் அவனைக் கொன்று, அவர்களைக் காப்பதாக வாக்குறுதி அளித்தார்.
விநாயகப் பெருமான், தனது போர்ப்படையுடன் அனலாசுரனுடன் போரிடச் சென்றார். அந்த அசுரனோ, வாயிலிருந்து நெருப்புகளாகக் கக்கினான். விநாயகரின் படைகள் அனைத்தும் அந்த நெருப்பில் அழிந்தன .
விநாயகருக்குக் கோபம் பொங்கியது. தொடர்ந்து போர் செய்தார். ஆனால், அவரால் அசுரனை வெல்ல முடியவில்லை. இதனால், தனது தும்பிக்கையால் அசுரனை அப்படியே தூக்கி வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.
வயிற்றின் உள்ளே சென்ற அசுரன் சும்மா இருக்கவில்லை. விநாயகரின் வயிற்றுக்குள் நெருப்பைக் கொட்டிக் கொண்டிருந்தான். விநாயகரும் வயிறு எரிகிறதே என்று கத்திக் கொண்டே நடனம் ஆடத் தொடங்கினார்.
இந்த விஷயம் தெரிந்தவுடன் தேவர்கள் ஓடோடி வந்தனர். விநாயகர் மீது குடம் குடமாக கங்கை நீரை அபிஷேகம் செய்தனர், பலனில்லை. அடுத்த முயற்சியாக, சந்திரனிடமிருந்து ஒளியைப் பாய்ச்சினர். அப்படியும் எரிச்சல் குறையவில்லை.
அப்போது ஒரு ரிஷி அங்கு வந்தார். அவர் அங்கிருந்த அருகம்புல்லை எடுத்து வந்து விநாயகரின் தலையில் வைத்தார். விநாயகருக்கு எரிச்சல் தணிய ஆரம்பித்தது. வயிற்றில் இருந்த அனலாசுரன் அப்படியே ஜீரணம் ஆகிவிட்டான்.
விநாயகருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதனால், விநாயகரின் அருளைப் பெறவிரும்பும் பக்தர்கள், அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்தால் நல்லது என்ற வழக்கம் உண்டானது.