ஒரு மருத்துவமனையில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. அவர்களைப் பார்ப்பதற்கு அவ்வப்போது செவிலியர் ஒருவர் வந்து செல்வார். அங்கு எப்போதும் தனிமைதான்.
சன்னல் படுக்கை நோயாளிக்குப் புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. இருவரும் பேச்சு மூலம் நட்பாகி விட்டனர்.
ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம், “உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது. எனக்கு அதுகூட இல்லை..!” என்றார்.
அதைக் கேட்ட அந்த நோயாளி, “கவலைப்படாதே நண்பா.. நான் சன்னல் வழியாக என்ன நடக்கிறதென்பதைப் பார்த்து அவ்வப்போது உன்னிடம் சொல்கிறேன்” என்றார்.
அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளையெல்லாம் சுவைபட தன் நண்பனுக்குச் சொல்லத் தொடங்கினார்.
”நண்பா... சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி, அதன் நடுவில் சிறு தீவு இருக்கிறது. ஏரியில் பல படகுகள் மிதக்கின்றன. ஏரிக்கரையில் அழகான பூங்கா, அதில் காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றனர்!”
எலும்பு நோயாளிக்கு அப்படியேக் காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.
சன்னல் நோயாளி இன்னொரு நாள்,
“ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க் கொண்டிருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றனர். மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள். மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”
ஊர்வல அரவங்கள் எதுவும் அந்த எலும்பு நோயாளிக்குக் கேட்கவில்லை என்றாலும், நாதசுரமும் தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்.
ஒருநாள் அந்த சன்னல் நோயாளி செத்துப்போனார்.
மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை... ஒருநாள் செவிலி ஒருவள் வந்தபோது, தன் படுக்கையைச் சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அப்படியே செய்யப்பட்டது.
இனி தனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியபடி, தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே பார்த்தார்.
அங்கே பெரிய சுவர்! வேறு எதுவுமே இல்லை!
அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன காட்சிகள் எல்லாம்...
மறுநாள் அந்தச் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்.
செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்,
“நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்குத் தெரிந்திருக்காது. அவர் புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டார்...”