பண்டரீபுரத்தில் பண்டரீகன் என்னும் இளைஞன் இருந்தான். தன் பெற்றோருக்குத் தொண்டு செய்வதையே தன் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தான். அவர்கள் இருவருக்கும் எந்த ஒரு கஷ்டமுமின்றி அவன் எப்பொழுதும் அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டேயிருப்பான்.
பண்டரீகன் தன் பெற்றோர்களிடம் வைத்திருக்கும் அனபையும், பக்தியையும் பற்றி எல்லோரும் சொல்வதை நேரில் பார்த்து வர விரும்பினர் பகவான் கிருஷ்ணரும் ருக்மணிதேவியும்.
அவர்கள் இருவரும் பண்டரீகன் வீட்டை அடைந்தனர். அப்போது பண்டரீகன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் காலை வருடிக் கொண்டிருந்தான்.
கிருஷ்ணரும், ருக்மணியும் வந்ததை அவன் கவனிக்கவே இல்லை. அவன் தன் தந்தையின் காலைப் பிடித்து விடுவதிலேயே கவனமாக இருந்தான்.
கிருஷ்ணரும் சற்று நேரம் நின்று பார்த்தார். பின்பு, "பண்டரீகா! நாங்கள் இருவரும் உனக்கு தரிசனம் கொடுக்கவே வந்திருக்கிறோம். நீ பெற்றோரிடம் கொண்டுள்ள அன்பையும், பக்தியையும் கண்டு உனக்கு தரிசனம் கொடுக்க வந்துள்ளோம்" என்றார்.
பண்டரீகன் அவர்களைத் திரும்பிப் பார்த்தான். அப்பாவின் காலைப் பிடித்துக் கொண்டிருந்தவன் அந்தச் செயலை நிறுத்திவிட்டு, அவர்களை எப்படிக் கவனிப்பது? ஆனால் விருந்தினர் வந்தால் அமர்வதற்கான இடம் தர வேண்டுமே என்று நினைத்தான்.
அருகில் இரண்டு செங்கற்கள் கிடந்தன. ஒரு கையினால் அந்த செங்கற்களைத் தூக்கி அவர்கள் பக்கம் வீசி எறிந்தான்.
"இந்த செங்கற்களின் மீது நில்லுங்கள். அப்பா விழித்துக் கொண்ட பிறகு உங்களைக் கவனிக்கிறேன். அதுவரையில் சத்தம் போடாமல் இருங்கள். ஏனெனில் சத்தம் போட்டால் என் அப்பா விழ்த்துக் கொண்டு விடுவார்" என்று மெதுவாகச் சொல்லிவிட்டு, தந்தையின் காலைப் பிடித்து விடும் செயலைத் தொடர்ந்தான்.
பாவம் கிருஷ்ணரும், ருக்மணியும் அதிக நேரம் அந்த செங்கற்களின் மீது நின்று கொண்டிருந்தார்கள். ருக்மணிக்கு அது வேதனையாக இருந்தது. தனது கணவரை இப்படி யாரும் அலட்சியம் செய்ததில்லையே என்று வருந்தினாள்.
அவள் கிருஷ்ணரைப் பார்த்து,"சுவாமி!" என்று கூப்பிட்டாள்.
"உஷ் சத்தம் போடாதே.பண்டரீகனின் தந்தை விழித்துக் கொண்டு விடுவார். அப்புறம் அவன் இங்கிருந்து நம்மைத் துரத்திவிடுவான்." என்றார் கிருஷ்ணர்.
தந்தை நன்றாகத் தூங்கி விழித்துக் கொண்ட பிறகே பண்டரீகன் அவர்களைத் திரும்பிப் பார்த்தான். பண்டரீகன் தங்களை அலட்சியம் செய்தததைப் பற்றி கிருஷ்ணர் சிறிது கூட வருத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக மகிழ்ச்சியே அடைந்தார்.
அவர் பண்டரீகனைப் பார்த்து, "பண்டரீகா! நீ உன பெற்றோரிடம் கொண்டுள்ள அன்பையும் பக்தியையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். உனக்காக இதே ஊரில் "விட்டோபா" எனும் பெயரில் இருப்பதுடன் என்னை வணங்க வருபவர்கள் அனைவருக்கும் உனது முதல் பக்தி தெரியட்டும்" என்றும் வாழ்த்தினார்.