அந்தக் காட்டில் இரண்டு மரங்களுக்கு நடுவில் ஒரு பேசும் செடி இருந்தது. அந்தச் செடி அந்தப் பக்கம் யார் போனாலும் மிரட்டி விரட்டியது. காட்டிலுள்ள மிருகங்கள் அந்த செடி இருந்த பக்கம் செல்லவே அஞ்சின.
ஒருநாள் சிறிய மான்குட்டி ஒன்று வழி தவறி பேசும் செடி இருந்த பக்கம் வந்துவிட்டது. பேசும் செடி பற்றி அதற்குத் தெரியாது.
அதைப் பார்த்த உடனே அந்தப் பேசும் செடி மிரட்டிப் பேச ஆரம்பித்துவிட்டது.
“ஏய்... மான்குட்டி... எப்படி இங்கே வந்தாய்?”
அந்த மான்குட்டி, “யாரு பேசறது?” என்றபடி சுற்று முற்றும் பார்த்தது.
உடனே அந்தச்செடி, “மான் குட்டியே, என்னைப் பற்றித் தெரியாதா...? நான்தான் பேசும் செடி... நான் உன்னைத் தின்னப் போகிறேன்” என்றது.
அதைக் கேட்ட மான்குட்டி “அய்யோ...அம்மா” என்று அலறியபடி கீழே விழுந்து மயங்கிவிட்டது.
சிறிது நேரத்தில் குட்டிமானைத் தேடிக்கொண்டு தாய் மான் வந்தது. உடனே பேசும்செடி, அந்தத் தாய் மானையும் மிரட்டியது.
அதற்குள் மான்குட்டி மயக்கம் தெளிந்து எழுந்து தாய் மான் பின்னால் போய் நின்று கொண்டது.
அப்போது திடீரென... எதிரில் உள்ள அரசமரம் பேச ஆரம்பித்தது.
“நான்தான் அரச மரம் பேசுகிறேன்... இப்போது நான் அந்த பேசும் செடியை அழிக்கப்போகிறேன்”
உடனே தாய்மானும் குட்டிமானும் அங்கிருந்து ஓடிப்போயின.
அய்யய்யோ எங்களை விட்டுடு என்று பேசும் செடியின் பின்னாலிருந்து இரண்டு கரடிக்குட்டிகள் வெளியே வந்தன.
“ஓ நீங்கள்தான் பேசும் செடியா?”
“ஆமாம்... ஆமாம்.. எங்களை மன்னித்து விடு அரசமரமே... இனிமே இப்படிச் செய்ய மாட்டோம்” என்றன.
“சரி... இனி யாரையும் ஏமாற்றக்கூடாது”
“சரி” என்றன இரண்டும்.
அவ்வாறு சொல்லியதும் அரச மரத்தின் பின்னாலிருந்து ஒரு கரடி வந்ததும், இரண்டும் “அம்மா நீங்களா ?”என்று ஓடிப்போய் கட்டிக் கொண்டன.