மாண்டவ்யர் என்ற ஒரு மாதவ முனிவர் கானகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.
சில கள்வர்கள் சாலவ மன்னனுடைய அரண்மனையில் களவு செய்து விட்டுச் சென்றார்கள். காவலர்கள் அவர்களைத் தொடர்ந்து விரட்டிச் சென்றார்கள். கள்வர்கள் இனி ஓடி ஒளிய இயலாதென உணர்ந்து மாண்டவ்ய முனிவருடைய பன்னசாலைக்குள் நுழைந்து, பொன்னும் மணியும் பொதிந்த மூட்டைகளை அவர் முன் வைத்துவிட்டு மூலைகளில் பதுங்கிக் கொண்டார்கள்.
தேடிவந்த காவலர்கள் குடிலுக்குள் நுழைந்து, மாண்டவ்யரையும் கள்வர்களையும் பற்றிக்கொண்டு பொன்மணிகளை எடுத்துக்கொண்டு அரசன் முன் நிறுத்தினார்கள்.
“வேந்தர் பெருமானே! இக்கள்வர்கள் இரவு நமது அரண்மனையில் இப்பொன்னையும் மணியையும் திருடினார்கள். இவன் இக்கள்வர்கட்குக் குரு; கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு வந்தோம்” என்றார்கள்.
மன்னவன் அவர்கள் கூற்றினை நம்பி கள்வர்களைக் கொல்லுமாறும் மாண்டவ்யரைக் கழுவில் ஏற்றுமாறும் கட்டளையிட்டான். அவ்வண்ணமே கள்வர்களைச் சிரச்சேதம் செய்தார்கள். மாதவ முனிவரைக் கழுவேற்றினார்கள்.
“காவலர்களே! நீங்கள் கூறியபடி இவன் கள்வர்களின் குருவாதலால் இவனை அறியாத வண்ணம் காவல் செய்யுங்கள்; வந்தவர்களைப் பிடித்து வாருங்கள்” என்று மன்னன் கூறினான். அதுபடி கழுமரத்தின் பாங்கர் காவலர்கள் ஒளிந்திருந்தனர்.
கழுவில் மாண்டவ்யர் சிவமந்திரத்தை ஓதிய வண்ணம் தொங்கிக் கொண்டிருந்தார். அவர் உடம்பெல்லாம் சிறு சிறு ஊசிகள் சொருகப்பட்டிருந்தன. பெரிய ஆணி நெஞ்சில் நின்று வருத்தியது. அவர் அவற்றை மறந்து, சித்தத்தைச் சிவன்பால் சேர்த்துத் தவ நிலையில் தொங்கினார்.
மூன்று தினங்கள் கழிந்தன. ஒரு நாள் விடியற்காலை ததீசி, மரீசி, அங்கிரசர், புலத்தியர், பிருகு, வசிட்டர், காசிபர் முதலிய முனி புங்கவர்கள் விண் வழியே சென்றவர்கள் மாண்டவ்யர் கழுவில் தொங்குவதைக் கண்டார்கள். உள்ளம் திடுக்கிட்டார்கள். கீழிறங்கி வந்தார்கள். மாண்டவ்ய முனிவரைக் கைகூப்பித் தொழுதார்கள்.
“தபோதனரே! தங்கட்கு இந்த இடர் எவ்வாறு நேர்ந்தது? எந்தப் பாவி தங்களைக் கழுவிலிட்டவன்? ‘அழிக ’ என்று ஒரு சொல் தங்கள் வாக்கிலிருந்து வந்தால் அவன் குலத்துடன் அழிவானே! பொறுமையின் பொக்கிஷமே! இது என்ன விந்தை? இது எந்த வகையான தவம்? தங்களை இப்படி எவரேனும் இடர் புரிந்தால் எங்களுக்கு உத்தரவு கொடுங்கள். அவர்களைப் பிடி சாம்பலாக எரிக்கின்றோம்.” என்றார்கள்.
மாண்டவ்யர், "முனி கணங்களே! வருகின்ற துன்பத்தைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்வதுவே தவத்துக்கு ஒரு அங்கமாகும் ஆகவே, என்னை ஒருவரும் கழுவேற்றவில்லை. என் வினை என்னை ஏற்றியது. வினையை நோக வேண்டுமேயன்றி வேறு யாரையும் நோவக் கூடாது. தவம் செய்வோருக்குப் பொறுமையே அணிகலன். ஒரு கட்டிடத்தைக் கடைக்கால் தாங்குவது போல தவத்தைப் பொறையுடைமை தாங்குகின்றது. நீவிர் இது பற்றி வருந்த வேண்டாம். சென்று வாருங்கள்” என்றார்.
முனி புங்கவர்கள் அவருடைய அருளுடமைக்கு உவந்து மீண்டும் வான்வழியே சென்றார்கள்.
இவற்றையெல்லாம் ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்த ஒற்றர்கள் மன்னவனிடம் ஓடிச் சென்று, " சோதி மயமான உடம்பு பெற்ற பல முனி புங்கவர்கள் வானிலிருந்து இறங்கி, கழுவிலிருப்பவரை வணங்கி நின்றார்கள். தங்களை இவ்வாறு செய்தவன் யார்? நாங்கள் சாபமிடுவோம் என்றெல்லாம் பலப்பல பகர்ந்தார்கள். ஆனால் கழுவிலுள்ள மகான் அவர்களிடம் என்னை ஒருவரும் கழுவில் ஏற்றவில்லை. என் வினையே என்னை ஏற்றியது. பொறுமையே பூஷணம். நீங்கள் ஆறுதலாகச் செல்லுங்கள்.” என்றார்.” என்றார்கள்.
மன்னன் இதைக் கேட்டு, தன் அறியாமைக்குப் பெரிதும் வருந்தினான். அரசாட்சியை வெறுத்தான். கழுவில் இருந்த முனிவர் பெருமானை மெல்ல இறக்கினான். உடம்பில் தைத்திருந்த ஊசிகளையெல்லாம் எடுத்தான். நெஞ்சில் இருந்த கம்பி ஆணியைப் பிடுங்கினால் அவருடைய திருமேனி மேலும் வருந்தும் என்று கருதி அரத்தைக்கொண்டு அராவினான். ஆணி சிறிது சிறிதாகத் தேய்ந்து கொண்டே வந்தது. இன்னும் நான்கு விரற்கடை இருக்கும் போது முனிவர், “ வேந்தே! போதும். இது இப்படியே இருக்கட்டும். இது எனக்கு அனுகூலம் புரியும். என்ன அனுகூலம் என்றால் நான் சிவ பூசை செய்பவன். பூசைக்கு மலர் எடுப்பேன். பூக்கூடை கொண்டு போவேன். பூக்கூடையை இடுப்புக்குக் கீழே தொங்க விடக்கூடாது. பூக்கூடையை உயர்த்தி ஒரு கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் மலர் பறிப்பேன். இப்போது நெஞ்சில் உள்ள ஆணியில் பூக்கூடையை மாட்டிவிட்டு ஒரு கையால் பூச்செடியை வளைத்து மற்றொரு கையால் மலர் எடுக்க மிகவும் உதவியாக இருக்கும். ஆகவே பூக்குடையை மாட்டி வைக்க இந்த ஆணி பயன்படும்” என்றார். அவருடைய சிவ பக்தியைக் கண்டு அரசனும் அருகே இருந்தோரும் அழுதார்கள்.
முனிவர் அவர்களை வாழ்த்திவிட்டுச் சென்றார். பின்னர் காட்டில் பெருந்தவம் புரிந்தார்.
பின்னர் ஒரு சமயம் பல உலகங்களைப் பார்த்து வந்தார். சத்திய உலகம், பொன்னுலகம், நாக உலகம், வருணனுலகம், யமனுலகம் முதலியவைகளைப் பார்த்தார். யமலோகத்தில் அறக்கடவுள் இவரை அன்புடன் பணிந்து இன்னுரை பகர்ந்து உபசரித்தார்.
மாண்டவ்ய முனிவர் அறக்கடவுளை வாழ்த்தினார். "அறக் கடவுளே! ஓர் ஐயம். நான் இப்பிறப்பில் எந்த உயிர்கட்கும் ஓர் அணுத்துணையேனும் இடர் புரிந்தேனில்லை. இந்த ஆணி என் நெஞ்சில் தைப்பதற்கு நான் என்ன குற்றம் புரிந்தேன் கூறும்.” என்று கேட்டார்.
அறக்கடவுள், “ ஐயனே! தாங்கள் முற்பிறப்பில் சிறு பிள்ளைப் பருவத்தில் தும்பியைப் பிடித்து அதன் வாலைக் கிள்ளிவிட்டு ஒரு முள்ளைச் சொருகிப் பறக்கவிட்டு விளையாடினீர். அவ்வினை இவ்வினையாக மூண்டது.” என்றார்.
முனிவர் நகை புரிந்து “ அறக்கடவுளே! அறிவு முதிராத சிறு பருவத்தில் செய்த வினை என்னை அடையலாமா? கண்டித்து நல்வழிப் படுத்தாத தாய் தந்தையரைச் சாரவேண்டும். இன்று முதல் ஒரு நியதி செய்வேன். இந்த அறத்தில் ஒரு திருத்தம் புரிவேன். “ஒரு பாலகன் பதினான்கு ஆண்டு வரை செய்த நல் வினை தீவினைகளில் ஒரு பகுதி தாய் தந்தையரைச் சாரக் கடவது. நீரும் மானுட உலகில் மனிதனாகப் பிறக்கக் கடவது.” என்று கூறிச் சென்றார். அதுபடி அறக்கடவுள் விதுரராகப் பிறந்தார்.
அன்று முதல் அற நெறியில் ஒரு திருத்தம் ஏற்பட்டது. மக்கள் 14 ஆண்டுகள் வரை புரியும் வினைகளில் ஒரு பகுதி மாதா பிதாக்களைச் சேரும் என்பது.
ஆணி நெஞ்சில் இருந்தபடியால் அவர் ஆணிமாண்டவ்யர் எனப்பெற்றார்.
ஆகவே நாம் இளம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டும். எவ்வுயிர்க்கும் இடர் புரியாதிருக்கவேண்டும்