முன்னொரு காலத்தில் சிந்து நதிக் கரையில் திருபாக்ஷன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இந்த உலகையே தான் அடக்கி ஆளவேண்டும் என்ற பேராசை எழுந்தது. அதனால் அவன் சிவபெருமானை நோக்கிக் கடும்தவம் புரிந்தான். பல வருடங்கள் அவன் கடுந்தவம் புரிந்த பின்னர் சிவபெருமான் அவன் முன் தோன்றினார். வேண்டிய வரம் கேட்கும்படி கூறினார்.
திருபாக்ஷன் "சுவாமி, இந்த உலகமே என்னைக் கண்டு கதி கலங்க வேண்டும், நானும் என் சந்ததியினரும் இந்த உலகையே ஆட்டிப் படைக்க வேண்டும். அதனால் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த உயிரினமாக என்னை மாற்றியருள வேண்டும்" என்றான்.
அதற்குச் சிவபெருமான் "உலகிலேயே சக்திவாய்ந்த உயிரினமாக உன்னை மாற்றுகிறேன். ஆனால் நீ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். என்றைக்கு உன் அக்கிரமங்கள் கட்டுமீருகிறதோ அன்று உன் இனத்தையே அழித்து விடுவேன்" என்றார்.
திருபாக்ஷன் அதற்கு சம்மதிக்கவே அவனை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததும் பெரியதுமான டைனோசர் இனமாக மாற்றிவிட்டார்.
அன்றிலிருந்து டைனோசர்கள் உலகையே ஆட்டிவைக்கத் தொடங்கின. காட்டில் வாழ்ந்த அவை திடீரென நாட்டுக்குள் புகுந்து நாட்டையே அழித்தன.
மக்கள் அதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். அவைகளின் அக்கிரமங்கள் எல்லை மீறவே அனைவரும் இறைவனிடம் சென்று முறையிட்டனர்.
சிவபெருமான் உடனே தோன்றி திருபாக்ஷனை எச்சரித்தார். அவன் அவரையே பொருட்படுத்தாமல் தன் நாச வேலைகளைத் தொடர்ந்தான். அதனால் சிவபெருமான் அவனையும் அவனது இனத்தையும் மண்ணோடு மண்ணாக அழித்துவிட்டார்.
திருபாக்ஷன் அவரது காலில் விழுந்து கதறினான். "என் இனத்தையே இருந்த சுவடு தெரியாமல் அழித்துவிட்டீர்களே இது நியாயமா, ஒருகாலத்தில் நாங்கள் இந்த உலகையே கதிகலங்க வைத்தோம் என்று வருங்கால சந்ததிகளுக்கு தெரியாமலேயே போய்விடுமே" என்று வருந்தினான்.
சிவபெருமான் அவன் மீது மனமிரங்கி "திருபாக்ஷா நீ செய்தது அநியாயம் என்றாலும், நீ என்னை நோக்கி நூறு வருடங்கள் தவம் புரிந்தவன். எனவே உன்னை அடியோடு அழிக்க நான் விரும்பவில்லை. உன் உருவத்தைச் சிறிதாக ஆக்கிவிடுகிறேன். ஒரு சாண் அளவுதான் இனி நீ இருப்பாய். வீட்டுக்கு வீடு இருந்துகொண்டு மனிதர்களுக்கு உன் குரல் மூலம் நீ ஆணவத்தினால் அழிந்த கதையை சொல்லிக் கொண்டே இருப்பாய். உன்னை யாரும் மறக்க மாட்டார்கள். இந்த உலகம் இருக்கும் வரைக்கும் உன் இனமும் இருக்கும்" என்று கூறி திருபாக்ஷனை ஒரு சிறு பல்லியாக மாற்றிவிட்டு மறைந்தார்.
ஆணவத்தில் அழிந்த அந்த திருபாக்ஷன் கதையைத்தான் நம் வீட்டிலிருக்கும் பல்லிகள் இன்றும் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன.