இறை நேசச் செல்வர் இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் மன்னராக இருந்து, இறுதியில் அரசைத் துறந்து ஆன்மீக ஞானியாக மாறினார்கள்.
புனித காபாவினருகே தனது வாழ்நாளை இறைதியானத்தில் கழித்தார்கள்.
அவர் பல்க் நாட்டின் அரசராக இருந்த போது, ஒரு முறை அவரின் மாளிகையில் மேல் மாடிக்குள் நுழைந்த ஒரு கிராமவாசி எதையோ அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட மன்னர், “ஐயா, நீங்கள் இங்கு எதைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அந்தக் கிராமவாசி, “காணாமல் போன எனது ஒட்டகத்தை தேடுகிறேன்” என்றார்.
அதனைக் கேட்ட அரசர் ஆச்சரியமடைந்தவராக, “மாடியில் ஒட்டகத்தை தேடுகிறீரே, உனக்கு அறிவிருக்கிறதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்தக் கிராமவாசி சிரித்தபடி, “மாமன்னரே! நீங்கள் இந்த மாடமாளிகையிலிருந்து கொண்டு இறைவனைத் தேடும் போது, நான் காணாமல் போன என் ஒட்டகத்தை மாடியில் தேடக் கூடாதா?” என்று கேட்டார்.
அரசரின் அகக்கண்கள் திறந்து கொண்டன. சிந்தனையில் ஆழ்ந்தார். சிம்மாசனத்தை ஒதுக்கி இறை வழிபாட்டில் தன் வாழ் நாளை கழிக்கலானார்.