கலீஃபா ஹஸரத் உமர்(ரலி) வழக்கம் போல் ஒரு நாள் இரவு தமது தோழரோடு நகர்வலம் வந்து கொண்டிருந்தார்.
பக்கத்தில் ஒரு குடிசையில் குழந்தைகளின் அழு குரல் கேட்டது. கலீஃபா குடிசைக்குள் எட்டிப் பார்த்தார்.
அங்கு ஒரு பெண் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, எதையோ வேக வைத்துக் கொண்டிருக்கிறாள். பிள்ளைகள் உணவு கேட்டு அழுது கொண்டிருந்தனர்.
கலீஃபா அப்பெண்ணிடம் விசாரித்த போது, அவள் ஒரு விதவையென்றும் பசி தாங்காது குழந்தைகள் அழுவதால் வெறும் தண்ணீரை அடுப்பில் வைத்து உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது என அவர்களைப் பொய் சொல்லிச் சமாதானப்படுத்துவதாகவும் கூறினாள்.
கலீஃபாவின் கண்களில் நீர் கசிந்தது.
எனது ஆட்சியில் இப்படியொரு அவல நிலையா? என ஏங்கிய அவர்கள், அவசரமாக தனது அரண்மனைக்கு வந்து கோதுமை மாவு மற்றும் சில உணவுப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு, தானே சுமந்து கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார்.
அவரது தோழர் உணவுச் சுமைகளைத் தான் சுமப்பதாகக் கூறினார். ஆனால் கலீஃபா, “மறுமையில் எனது பாவச்சுமைகளை நீ சுமப்பாயா?” எனக் கூறி மறுத்து விட்டுத் தானே அதை சுமந்து சென்று கொடுத்தார்,
அந்தப் பெண் அதில் உணவு சமைத்து பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுத்தாள். அத்துடன் மாதந்தோறும், அரசுக் களஞ்சியத்திலிருந்து அப்பெண்ணுக்குத் தேவையான பொருட்களை வழங்கும் படியும் உத்தரவிட்டார்.
இதனால் இஸ்லாமிய சரித்திர நூலாசிரியர்கள் இவரை ‘மூட்டை சுமந்த முடிமன்னர்’ எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.