கோமோரா மற்றும் சோடாம் நகரங்களை பற்றிய ஒரு அழகிய கதை ஹசிடீஸ் மக்களிடம் உண்டு.
யூத மக்களின் கடவுள் மிகவும் கோபக்காரர். அவர் ஒருநாள் கோமோரா மற்றும் சோடாம் நகர மக்கள் மீது கோபம் கொண்டு அந்த நகரங்களை அழிக்க முடிவு செய்தார்.
அப்போது ஒரு ஹசிடீஸ் ஞானி கடவுளை அணுகி, “சோடாம் நகரத்தில் நூறு நல்லவர்களும் ஆயிரம் கெட்டவர்களும் இருப்பதாக வைத்துக்கொண்டால் நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த நூறு நல்லவர்களும் சேர்ந்து அழிந்து போவார்கள் அல்லவா” எனக் கேட்டார்.
கடவுள் யோசித்தார். பின்னர் , “நான் இப்படிச் சிந்திக்கவில்லை. சரி போகட்டும், நான் அழிக்காமல் விடுகிறேன், ஆனால் நீ எனக்கு அந்த நூறு நல்லவர்களைக் காட்ட வேண்டும்” என்றார்.
உடனே அந்த ஞானி, “கடவுளே, பொறுங்கள். என்னால் நூறு பேர்களைக் காட்ட முடியாமல் போகலாம், ஆனால் பத்து நல்லவர்கள் மட்டும் இருந்தால் அந்த நகரத்தை அழிப்பது முறைதானா நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்தப் பத்துபேரும் சேர்ந்து அழிந்து போவார்களே” என்று கேட்டார்.
கடவுளும், “நான் இதைப்பற்றியும் சிந்திக்க வேண்டும். சரி நூறு எனும் எண்ணிக்கை முக்கியமல்ல. நீ எனக்கு பத்து நல்லவர்களையாவது காட்ட வேண்டும்” என்றார்.
அந்த ஞானி, “சிறிது பொறுங்கள். இன்னும் ஒரு கேள்வி, ஒரே ஒரு நல்லவன் இருந்தால் நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், நூறாயிரம் மக்களின் கெட்டதை விட ஒரே ஒரு நல்லவனின் நல்லதன்மை மதிப்பு வாய்ந்தது அல்லவா, கேடு நினைப்பது ஒரு எதிர்மறையான குணம் அதற்கு மதிப்பு கிடையாது, ஆனால் நல்லதன்மைக்கு மதிப்பு உண்டல்லவா, நீங்கள் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடாது. அந்த ஒரு நல்லவனை நீங்கள் ஒதுக்கி விட முடியாது” என்றார்.
கடவுள், “உன்னுடைய தர்க்கம் சரியானதுதான். ஆயிரமோ, நூறோ, ஒரே ஒருவனோ, நான் நல்லவர்கள் பக்கம்தான். ஆனால் நீ அந்த ஒரு நல்லவனாவது இங்கு இருக்கிறான் என்பதை நிரூபித்தாக வேண்டும்” என்றார்.
உடனே ஞானி, “நாம் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை. அந்த ஒரு நல்லவனாக நான் இங்கிருக்கிறேனே” என்றார்.
கடவுள் யோசித்துக் கொண்டிருந்த போதே, “கடவுளே, என்னைப் போன்று ஒருவராவது நல்லவராக இருக்கிறோம் என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்கத்தான் உங்களிடம் நல்லவர்கள் எண்ணிக்கையை நான் குறைத்துக் கொண்டே வந்தேன். என்னால் ஆயிரம் பேர்களையோ, நூறு பேர்களையோ கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். எப்படி அடையாளம் காண்பது. நான் நல்லவனான கணத்திலிருந்து யாரையும் நல்லவன் கெட்டவன் எனப் பிரிப்பதுப் பார்ப்பதை நான் நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவரே. நான் யாரிடமும் எந்தவிதமான, கெட்டதையும் பார்ப்பதில்லை. கெட்டதன்மை என்பது ஒரு நிழல் போன்றது. மேலும் அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது. கெடுதல் உண்டாக்கும் செயல்களை அவன் செய்திருக்கலாம். ஆனால் அது அவனது இருப்பையேக் கெடுத்திருக்காது. ஒரு செயல், இரண்டு செயல், மூன்று செயல் ஏன் நூறு செயல் கூட கெட்டதை செய்திருக்கலாம், ஆனால் அவனது இருப்பு எப்போதும் தூய்மையானதாகவே இருக்கிறது.
இருப்பு தனது செயல்களிலிருந்து வெளியே வர முடியும். அது தனது செயல்களை விட்டு விட முடியும். அது தனது கடந்த காலத்தை உதறி விட முடியும். அப்போது அந்த வினாடியிலிருந்து அந்த மனிதன் புனிதன் ஆகிறான். யாரும் அவனைத் தடுக்க முடியாது. நல்லவன் கெட்டவன் என்பதை எப்படித் தீர்மானிக்க முடியும், தீர்மானிக்க வழியே இல்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். அந்த நகரங்களில் நல்லவர்களே இல்லை என்று அர்த்தமல்ல. உண்மையில் நான் இரண்டு நகரங்களிலும் இருந்திருக்கிறேன், நான் நல்லவர்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். நான் இரண்டு நகரங்களிலும் இருக்கிறேன். வருடத்தில் பாதி நாள் அந்த நகரத்திலும் மீதி நாள் இந்த நகரத்திலும் இருப்பேன். என்னையும் சேர்த்து நீங்கள் அழித்து விடப் போகிறீர்களா?” என்று கேட்டார்.
அதன் பின்பு கடவுள் அந்த இரண்டு நகரங்களையும் அழிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டாராம் என்கிறது அந்த ஹசிடீஸ் கதை.