ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.
அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும் என்று அரசவை வைத்தியர்கள் சொல்லி விட்டனர்.
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.
அதில் முதலாமவன், நான் அந்த மூலிகையைக் கொண்டு வருகிறேன் எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அவனுக்கு வழிகாட்ட முன்வந்த தேவதை, அவனுக்கு ஒரு நிபந்தனையை விதித்தது.
தேவதை சொன்ன நிபந்தனை இதுதான்.
“நீ முன்னால் நடந்து செல்லும் போது, நான் உன் பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நீ நடப்பதை நிறுத்தக்கூடாது. நடந்து கொண்டே இருக்கவேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்கக் கூடாது”
முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிக் கொண்டே சென்றது. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை. என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பிப் பார்த்தான்.
நிபந்தனையை மீறிய அவன் கற்சிலையாகி விட்டான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்பினான்.
கிட்டதட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிட்டான். அங்கு திடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது.
ஆர்வம் மிகுதியால், அந்தச் சிரிப்பொலி எங்கிருந்து வருகிறது என்று அவன் திரும்பிப் பார்த்தான்.
அவனும் கற்சிலையாகிப் போனான்.
மூன்றாமவன் அடுத்து வந்தான்.
அவனுக்கும் அதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. அவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம். சிரிப்பொலி. என்று எது கேட்ட போதும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், பின்னால் திரும்பிப் பார்க்காமல் முன்னே சென்றான்.
அங்கிருந்த மூலிகையைப் பறித்துக் கொண்டு திரும்பினான்.
இந்தக் கதையிலிருந்து என்ன தெரிகிறது?
பின்னால் வரும் தேவதைதான் நமது மனம். நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் அது செய்யும். அதைப் புறக்கணித்து வெற்றியைக் கைப்பற்றுவதில் தான் நம் வெற்றி அடங்கி இருக்கிறது.